17 நவம்பர் 2020

மனமும் தன்னுணர்வும்



*மனம் ஒரு பிளவுபட்ட* 

*கண்ணாடியைப் போன்றது ..!*


*உணர்வுகள் பிளவுபட்டு* 

*விடும்போது அவை* 

*மனமாக மாறி விடுகிறது ..!*


*நீங்கள் உள்ளே* 

*பிளவு பட்டிருப்பதால்*

*அவை வெளியே* 

*வேறுபட்டு தெரிகின்றன ..!*


*எதிர் நிலை இல்லாமல்* 

*மனம் ஒரு பொருளைப்* 

*புரிந்து கொள்வதில்லை ..!*


*வேறுபாட்டின்*

*வாயிலாகத்தான் எதையும்* 

*மனம் பார்க்க பழகியுள்ளது ..*


*இறப்பே இல்லையென்றால்* *வாழ்க்கையை நம்மால்* 

*புரிந்து கொள்ளமுடியாது ..!*


*கவலையே இல்லையென்றால்* 

*நம்மால் சந்தோஷத்தை* 

*புரிந்து கொள்ள முடியாது ..!*


*மனதிற்கு எதிர்மறை* 

*தென்படும் போதுதான்* 

*எதையும் புரிந்து கொள்ளும் ..!*


*இருப்பு நிலைக்கு*

*எதிர்மறை* 

*எதுவும் கிடையாது ..!*


*மனம் எதிர்மறையின்* 

*வாயிலாகத்தான்* 

*இயங்கும் ..!*


*ஆனால் இருப்புநிலை* 

*ஒன்றையே சார்ந்தது ..!*


*மனம் இரட்டை நிலை* 

*கொண்டது ...

11 நவம்பர் 2020

வலிகள் தான்.வாழ்க்கை



*வாழ்க்கையில்*

*ஆயிரம் வலிகளும்,*

*வேதனைகளும்,*

*துன்பங்களும்*

*இருக்கத் தான் செய்யும்.*


*வாழ்க்கையை*

*ரசித்து வாழ வேண்டும்*  

*எல்லாம் கடந்தால் தான்*

*சிகரங்களை அடைய முடியும்.*


*வலிகளை*

*ஏற்றுக் கொள்ளாத* 

*வரையில்* 

*வாழ்க்கையில்*

*வளங்களைக்* 

*காண முடியாது.*


*பெரும்பாலான* 

*வெற்றியாளர்களின்* 

*சாதனைகளை* 

*உரம் போட்டு வளர்ப்பதே*

*அவர்களின்* 

*பெருந்தோல்விகளும்*, 

*பொறுக்க முடியாத*

*வலிகளும் தான்.*


*வலி வந்த போது*

*தான் நாம் இந்த* 

*பூமிக்கு வருகிறோம்.*


*வலியோடு தான்*

*நம் தாய் நம்மைப்*

*பிரசவிக்கிறாள்.*


*வலிகளால்*

*நிரப்பப்பட்டது தான்*

*இந்த வாழ்க்கை.*


*உடற்பயிற்சி செய்யும்*

*போது ஏற்படும்*

*வலிகளை பொறுத்து*

*கொண்டு மீண்டும் மீண்டும்*

*பயிற்சி செய்யும் போது தான்* 

*அழகான உடற்கட்டை*  

*பெற முடிகிறது.*


*இப்படித் தான்* 

*இந்த வாழ்க்கையிலும்* 

*வலிகளை ஏற்றுக் கொள்ளும்* 

*போது தான் வளமான* 

*வாழ்க்கை வாழ முடியும்.*


10 நவம்பர் 2020

முதுகு வலி.. தப்பிக்க என்ன வழி?*

 





''இன்றைய வாழ்க்கைச் சூழலில், முதுகு இருக்கும் அனைவருக்குமே முதுகு வலியும் இருக்கிறது!


உடம்பில் உள்ள அனைத்துத் தசைகளின் அழுத்தமும் ஒருசேர முதுகுத் தண்டில் குவிவதால் ஏற்படும் பிரச்னை இது'' என்கிறார் எலும்பு மூட்டு நிபுணர் (ஆர்த்ராஸ்கோப்பிக் அறுவைச் சிகிச்சையாளர்) டாக்டர் ரவி சுப்பிரமணியம்.


*''உடல் ரீதியாக முதுகு வலி எப்படி உருவாகிறது?''*


''சிறு சிறு கண்ணிகள் போன்ற அமைப்புடன் கூடிய 33 எலும்புகள் ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கிய நிலையில் வலுவாகப் பிணைத்துவைக்கப்பட்டதுதான் 'முதுகெலும்புத் தொடர்’. இதில், எலும்புகளுக்கு இடையில் உராய்வைத் தடுக்கும் விதமாக டிஸ்க் எனப்படும் ஜெல்லி போன்ற மிருதுவான பாகங்கள் உள்ளன. இரு சக்கர வாகனங்களில் அதிர்வுகளைத் தாங்குவதற்குப் பயன்படும் 'ஷாக் அப்சர்வர்’ போன்ற அமைப்பு இது.


துளையுடனான முதுகெலும்புகளுக்கு நடுவே மிகவும் பாதுகாப்பான நிலையில் இருக்கின்றன தண்டுவட நரம்புகள். உடல் உறுப்புகள் அனைத்தையும் கட்டுப்படுத்தக்கூடிய மூளையின் உத்தரவுகளை கடத்திச் செல்லும் முக்கியப் பணியைச் செய்வது இந்தத் தண்டுவட நரம்புகள்தான். முதுகெலும்புகளுக்கு மத்தியில் உள்ள டிஸ்க் நகர்ந்து இந்த நரம்புகள் நசுக்கப்படும்போது தாங்க முடியாத வலி ஏற்படும். இதைத்தான் முதுகு வலி என்கிறோம்.''


*''முதுகு வலி வருவதற்கான காரணங்கள் என்னென்ன?''*


''உடற்பயிற்சி இல்லாமல் இருப்பதுதான் பலருக்கும் முதுகு வலி வருவதற்கான முக்கியக் காரணம். வேலை நிமித்தமாக தொடர்ச்சியாக கம்ப்யூட்டர் முன்பு அமர்ந்தே இருக்கக்கூடிய சூழல், தினமும் இரு சக்கர வாகனங்களில் நெடுந்தொலைவு பயணித்தல், உடல் எடை கூடுதல், கூன் விழுந்த நிலையில் உட்கார்ந்திருத்தல் போன்ற செய்கைகளால், உடல் தசைகள் பலவீனம் அடைவதோடு, முதுகெலும்புகளில் உள்ள 'டிஸ்க்’ அமைப்புகளிலும் அதீத அழுத்தமும் தேய்மானமும் ஏற்படுகிறது. இதனால், ஒட்டுமொத்த முதுகெலும்பு அமைப்பும் சீர்குலைவதோடு, தண்டுவட நரம்புகளும் அழுத்தப்பட்டு வலி ஏற்படுகிறது. தவிர, எலும்புகளில் ஏற்படும் சத்துக் குறைவுப் பாதிப்புகளாலும் முதுகு வலி வரும்.''


*''எலும்புகளில் என்னென்ன பிரச்னைகள் தோன்றும்?''*


''எலும்பின் உறுதித்தன்மைக்கும் ஆரோக்கியத்துக்கும் கால்சியத்தின் பங்கு முக்கியமானது. 20 வயது இளைஞனின் எலும்பில் கால்சியத்தின் அளவு அதிகமாக இருப்பதால், எலும்புகளும் வலுவாக இருக்கும். ஆனால், வயது கூடும்போது இந்த கால்சியத்தின் அளவும் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து எலும்பு மெலிந்து, மிருதுத்தன்மையை அடைந்துவிடும். இதை 'எலும்பு மெலிதல்’ (Osteoporosis) என்கிறோம். நகரச் சூழலில் இருப்பவர்கள் பெரும்பாலும் வீட்டிற்குள்ளேயே அடைந்துகிடப்பதால், உடலில் வெயில் படுவதே அபூர்வமாகிவிட்டது. வெயிலில் கிடைக்கும் 'வைட்டமின் டி’ எலும்புகளுக்குக் கிடைக்காமல் போவதாலும் எலும்புகள் மிருதுத்தன்மை அடைந்து எளிதில் தேய்மானமாகும் வாய்ப்பு உள்ளது. எனவே, தினமும் அரை மணி நேரமாவது உடலில் வெயில் படும்படியாகச் சூழ்நிலைகளை மாற்றிக்கொள்வது நல்லது!''


*''முதுகு வலித் தொல்லையில் இருந்து விடுபட, கால்சியம் நிறைந்த உணவுகளைச் சாப்பிட்டால் போதுமா?''*


''அப்படி இல்லை. 'பாலில் கால்சியம் சத்து உண்டு. எலும்பின் ஆரோக்கியத்துக்கு இது நல்லது’ என்று நினைத்து நிறைய பேர் பால் குடிக்கிறார்கள். ஆனால், பாலில் உள்ள கால்சியத்தைப் பிரித்தெடுக்கும் ரெனின் என்சைம் (Rennin Enzyme) குழந்தைகளின் (குறிப்பிட்ட வயது வரை) உடலில் மட்டுமே சுரக்கிறது. பெரியவர்களுக்கு இந்த வகை என்சைம்கள் இயற்கையாகவே உடலில் சுரப்பது இல்லை. எனவே, எவ்வளவுதான் பால் குடித்தாலும் அதில் இருக்கும் கால்சியம் எலும்புகளுக்கு கிடைக்காது. அடுத்ததாக, கார்பனேட்டட் ட்ரிங்க்ஸ், பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளில் பாஸ்ஃபோரிக் அமிலம் (Phosphoric Acid)சேர்ப்பார்கள். இது உடலில் கால்சியம் சத்து உறிஞ்சப்படுவதைத் தடை செய்யும். எனவே, இதுபோன்ற உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும். சாதாரணமாக நாம் சாப்பிடும் உணவு வகைகளிலேயே நமது எலும்புகளுக்குத் தேவையான கால்சியம் சத்து இருக்கிறது. கால்சியத்தை எலும்பு கிரகிக்கவும், முதுகு வலிக்கு முடிவு கட்டவும் ஒரே வழி உடற்பயிற்சிதான். உடற்பயிற்சி செய்யும்போதுதான், எலும்புகள் தங்களுக்குத் தேவையான கால்சியத்தை உறிஞ்சும்!''


*''எலும்பின் ஆரோக்கியம் காக்க எந்த வகை உடற்பயிற்சிகள் செய்யலாம்?''*


''நீச்சல், ஓட்டம், சைக்கிளிங் போன்ற எலும்பு மூட்டுகளுக்குப் பயிற்சி அளிக்கக்கூடிய ஏரோபிக்ஸ் (Aerobics Exercise) வகை உடற்பயிற்சிகள் நல்லது. இவை தவிர, உடலின் வளைவுத்தன்மைக்கு உதவும் யோகாவும் எலும்பின் ஆரோக்கியத்தைக் காக்க வல்லது!''



28 அக்டோபர் 2020

 சிலர் எவ்வளவுதான் காயப்படுத்தினாலும் அவர்களை வெறுக்க முடிவதில்லை....


சிலவேளைகளில் எவ்வளவுதான் அழுது தீர்த்தாலும் வலிகள் ஆறுவதில்லை


உறவுகள் நிலைக்க வேண்டுமென்றால் செய்யாத தவறை ஒப்புக் கொள்ள வேண்டி இருக்கிறது


அந்த உறவு தொடர வேண்டுமென்றால் செய்யாத தவறுக்கு மன்னிப்பு கூட கேட்க வேண்டி இருக்கிறது


கேள்விகளுக்கு பதில் சொல்ல தெரியாதவர்களுக்கு வார்த்தைகளால் கொலை செய்ய தெரிகிறது


மௌனத்தை உணர்ந்து கொள்ள தெரியாதவர்களுக்கு வீண்பழி சுமத்த முடிகிறது


புரிந்து கொண்டால் கோபத்திற்கான நியாயம் தெரியும்


புரியவில்லை என்றால் அன்பின் ஆழம் கூட தெரியாது


காயங்களை மற்றவர்களுக்கு காட்டிகொள்ளாமல் உள்ளுக்குள் தன்னைத்தானே வருத்திக்கொண்டு


புன்னகையோடு கடந்து செல்லும் மனிதர்களில் நானும் ஒருவன்

25 அக்டோபர் 2020

சோகங்கள் ஒன்றும் சொத்துக்கள் அல்ல சேர்த்து வைப்பதற்கு

 


விழித்துக்கொள் மனிதனே..


கால சூழ்நிலைக்கு

ஏற்றவாறு உன்னை

மாற்றிக்கொள்..!


ஆம்...!

மனிதமில்லா உலகில்

சொத்துக்களுக்கு

இருக்கும் 

மதிப்பு கூட 


மனிதனின்

சோகங்களுக்கு

இருப்பதில்லை..!


காசு பணத்திற்கு

இருக்கும் 

மதிப்பு கூட 


மனிதனின் 

கண்ணீர் 

துளிகளுக்கு

இருப்பதில்லை..!


அடாவடி 

மனிதர்களுக்கு 

இருக்கும் 

மதிப்பு கூட 


அன்பானவர்களுக்கு

இருப்பதில்லை..!


விழித்துக்கொள்

மனிதனே..!


சோகங்கள் ஒன்றும்

சொத்துக்கள் அல்ல

சேர்த்து வைப்பதற்கு

அதை அன்றன்றே

செலவு செய்துவிடு..!


கண்ணீர் துளிகள் ஒன்றும் விலைமதிப்பற்றவையல்ல

யாருக்கு வேண்டுமானாலும் 

சிந்தி கொண்டிருக்க..!


அன்பு ஒன்றும்

அனாதையல்ல

தகுதியற்றவரிடத்திலும் 

காட்டி ஏமாந்து விட..!


விழித்துக்கொள்

மனிதனே..!


இயந்திர 

உலகிற்கு ஏற்ப

இசைந்து வாழ 

கற்றுக் கொள்..!


மனிதாபிமானமற்ற

உலகில் மனிதத்தை

தேடி காலத்தை

கடத்தாதே..!


கடத்தினால்...!

காலவிரயத்தோடு

தொலைவதென்னவோ

உன் வாழ்வியலே...!!


23 அக்டோபர் 2020

வாழ்க்கை

 





வாழ்க்கை எப்போது அழகாகிறது


உங்களுக்குள் ஒரு முறை கேட்டுப்பாருங்கள். வாழ்க்கை என்பது என்ன?


உயிரோடு இருப்பதா?


மகிழ்ச்சியாக இருப்பதா?


பணம் புகழைத்தேடி தலை தெறிக்க ஓடுவதா?


தோல்விகளில் கற்றுக் கொள்வதா?


வெற்றிகளில் பெற்றுக் கொள்வதா?


தன்னலமற்ற அர்ப்பணிப்பா?


தத்துவங்களின் அணிவகுப்பா?


 இவைகளில் எது வாழ்க்கை என்று உறுதியாக கூற முடியாவிட்டாலும், பிறந்தவர் அனைவரும் வாழ்ந்தே தீர வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.


வாழ்க்கை என்பது ஓர் அனுபவம். ஆளுக்கு ஆள் மாறுபடும். சுகமோ துக்கமோ அனுபவம் நம்மை பலப்படுத்துகிறது. காயப்படுத்துகிறது, சிரிக்க வைக்கிறது, அழவைக்கிறது. முடிவில் இதில் எது வாழ்க்கை என்று சிந்திக்க வைக்கிறது.


இறைவனால் இவ்வுலகில் படைக்கப்பட்ட மற்ற ஜீவராசிகளுக்கு வாழ்க்கையை பற்றிய ஆராய்ச்சி எதுவுமில்லை. விலங்குகள் தற்கொலை செய்து கொள்வதுமில்லை. காரணம் அவைகளுக்கு முடிவை பற்றிய பயமில்லை. அந்த வகையில் அறியாமை ஒரு வரம்.


தான் அறிவாளி என்று கர்வப்படும் மனிதனால் வாழ்க்கையில் ஜெயிக்க முடிவதில்லை. காரணம் அறிவு மட்டும் வாழ்க்கைக்கு போதாது. அதற்கு மேலும் ஒன்று தேவைப்படுகிறது. அது என்ன..? தன்னம்பிக்கை. மனோபலம் உள்ளவனுக்கு மட்டுமே அது சாத்தியமாகும்.


மற்ற உயிரினங்களிலிருந்து மனிதன் பல விதத்தில் மாறுபடுகிறான். சூழ்நிலைக்கேற்ப தன்னை மாற்றிக் கொள்வதில், தன் தேவைகளை தானே தேடி பூர்த்தி செய்து கொள்வதில், நன்மை- தீமைகளை பகுத்தறியும் விதத்தில் பிறருக்கு வழிகாட்டியாக இருப்பதில்..! இத்தனை யும் பெற்று, சிந்தித்து செயல்படும் திறன் பெற்றிருக்கிறான் மனிதன்,


நம்மைவிட உடலில் பலசாலி யானை


நம்மைவிட வேகத்தில் சிறந்தது குதிரை


நம்மைவிட உழைப்பில் சிறந்தது கழுதை.


இப்படி மிருகங்கள் நம்மைவிட பலமடங்கு பலசாலிகளாக இருந்தாலும், நாம்தான் இவைகளை அடக்கி ஆள்கிறோம். காரணம் மனிதன் மட்டுமே மனோபலம் கொண்டவன். நமக்கு ஏற்படுகிற பிரச்சினைகளும் அப்படித்தான். அதனை அடக்கியாளும் சக்தி நம்மிடம் உள்ளது.


நம்பிக்கை எனும் வானவில் நம்மிடம் எப்போதும் இருக்கவேண்டும். வானவில் தோன்றும் போது வானம் அழகாகிறது. நம்பிக்கை தோன்றும் போது வாழ்க்கை அழகாகிறது.


பொறுமையைவிட மேலான தவமுமில்லை.திருப்தியை விட மேலான இன்பமுமில்லை.இரக்கத்தை விட உயர்ந்த அறமுமில்லை.மன்னித்தலை விட ஆற்றல் மிக்க ஆயுதமில்லை .


தோல்விகள் சூழ்ந்தாலும். இருளை விளக்கும் கதிரவன் போல அதனை நீக்கி அடுத்தடுத்த வெற்றி படியில் கால் அடி எடுத்து வையுங்கள். முடியும் வரை அல்ல, உங்கள் இலக்கினை அடையும் வரை. இந்த விடியல் உங்கள் வாழ்விலும் விடியட்டும்… 


முக மலர்ச்சியோடும், நம்பிக்கையுடனும் எழுந்து புதிய நாளை துவங்க இறைவன் அருள் புரியட்டும்…

                       

 




21 அக்டோபர் 2020

மறக்காதீர்கள்

 வாழ்க்கையில நல்லது கெட்டது எல்லாமே நடக்கும். எல்லாத்துக்கும் ஒரு காரணம் இருக்கும். ஆனா சில நேரங்களில் அதை நம்மால் புரிஞ்சிக்க முடியாமப் போகலாம். அதனால நாம ஆழமா யோசிக்காமலோ, சரியா புரிஞ்சிக்காமலோ, யாரைப் பத்தியும் எந்த ஒரு தவறான முடிவுக்கும் வந்துடக் கூடாது


*நாம சாப்பிட ரெஸ்டாரெண்ட் போகும் போது, நம்மில் ஒருத்தர் முந்திக் கொண்டு காசு கொடுக்க முன் வந்தா, காரணம் அவருக்குப் பணக்காரர் என்ற திமிர் என்று அர்த்தமில்லை, பணத்தை விட நம்ம நட்பை அவர் அதிகமா மதிக்கிறார்னு அர்த்தம்*.


*ஒரு தவறுக்கு, ஒருவர் முந்திக் கொண்டு மன்னிப்புக் கேக்கிறார்னா அவர் தான் தப்பு பண்ணிருக்கார்ன்னு அர்த்தமில்லை, ஈகோ(Ego) பெரிசில்ல; உறவு தான் பெரிசுன்னு அவர்  மதிக்கிறார்னு அர்த்தம்*


*நம்ம கண்டுக்காம விட்டாலும் நமக்கு ஒருவர் ஃபோன் / மெஸேஜ் பண்றார்னா அவர் வேலை வெட்டி இல்லாதவர்னு அர்த்தமில்லை, நாம் அவர் மனசில எப்பவும் இருக்கோம்னு அர்த்தம்*.


*பின்னொரு காலத்தில் நம்ம புள்ளைங்க நம்ம கிட்ட கேட்கும் : யாருப்பா அந்த போட்டோல இருக்கிறவங்கள்லாம்னு*.


*ஒரு கண்ணீர் கலந்த புன்னகையோட நாம சொல்ல நேரலாம் : அவங்க கூடத் தான் சில நல்ல தருணங்களை நாம செலவிட்டோம்னு*.


 :


*வாழ்க்கை குறுகியது ஆனால் அழகியது* !


அன்பை மட்டுமே விதைப்போம்!


அன்பை மட்டுமே அறுவடை செய்து ஆனந்தமாக வாழ்வோம்!


20 அக்டோபர் 2020

சோகம்

 



எம்மில் ஏராளமானோர் ஏதோவோர் சோகத்தில் தான் வாழ்வை கடத்திக் கொண்டு இருக்கின்றோம். உண்மையில் அதற்கான காரணம் என்ன என்று எம்மிடமே கேட்டுக் கொண்டால் எதுவுமே இல்லை என்று இலகுவாகச் சொல்லிவிடலாம்.


வாழ்வை நாம் பார்க்கும் கண்ணோட்டத்தில், எந்தவொரு விடயத்தையும் நாம் பார்க்கும் விதத்தில் தான் சோகமோ சந்தோசமோ இருக்கின்றதே தவிர எதுவுமே எம்மைத் தாக்கும் காரணியாக இருந்து விடாது. “கயிறை பாம்பாகப் பார்த்தால் பாம்பாகவும், வெறும் கயிறாகப் பார்த்தால் கயிறாகவும் தெரியும்” என்று ஒரு கதை சொல்வார்களே அப்படித்தான்.


கண்முன்னே தெரியும் ஒரு விடயத்தை அப்படியே பார்க்காமல் “இது இப்படி இருக்குமோ, இல்லை அப்படி இருக்குமோ” என்று பல்வேறு காரணிகளை நாமே கேட்டுக் கொண்டு உண்மைகளை பார்க்க மறுத்து பிடிவாதமாகப் பிடித்துக் கொண்டு இருக்கின்றோம்.


உண்மையில் எதிர்பார்ப்பிலேயே வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம். எந்தவொரு விடயமும் நாம் எதிர்பார்ப்பது போலவே நடந்து விட்டால் அதில் மகிழ்ச்சி இல்லையென்றால் புலம்பல். காரணம் எதனையும் எதிர்பார்ப்புகளோடு பிணைத்து வாழ்ந்து பழகிவிட்டபின்னர் உண்மைகளை எப்படி புரிந்து கொள்வது.


இதற்கு தான் சொல்வார்கள் கண்ணைத் திறந்து பாருங்கள் என்று. மனிதர்களில் இவர் நல்லவர் கெட்டவர் என்று வகைப்படுத்திக் கொள்கின்றோம். நிதர்சனம் யாதெனின் மனிதர்களில் நல்லவர் கெட்டவர் என்று எவருமில்லை. இது செயல்களைப் பொறுத்தே அமைகின்றது. அதிலும் இது நல்லது இது கெட்டது என்று செயல்களையும் எம்மால் புரிந்து கொள்ள முடியாது. செயல் எமக்குச் சாதகமாக அமைந்து விட்டால் அது நல்லது இல்லையென்றால் அது கெட்டது இப்படித்தானே எடுத்துக் கொள்கின்றோம்.


பொய் என்கின்றோம், உண்மை என்கின்றோம் அதனை எப்படி வகைப்படுத்துகின்றோம்? ஒரு பக்கத்தில் பொய்யாக பார்க்கப்படுவது மறுபக்கத்தில் உண்மைக்குள் தொற்றியிருக்கும், இப்படித்தான் எதுவுமே அதனால்தான் அனைத்தையும் அதன் போக்கிலேயே அப்படியே பார்த்து விட்டோமானால் பிரச்சினைகள் ஏதுமில்லை.


வாழ்வில் கடந்தகாலம், அல்லது எதிர்காலம் இந்த இரண்டில்தான் வாழ்ந்து கொண்டு இருக்கின்றோமே தவிர இப்போது என்ன கிடைத்தது என்பதை சிந்திக்கவும் தவறிவிடுகின்றோம். உண்மையில் கடந்தகாலம் என்பதும், எதிர்காலம் என்பதும் (Illusion) வெறும் மாயை. அடடா நேற்று இப்படி இருந்தோமே அந்த சந்தோசம் இன்று இல்லையே என்று வாழ்வை புலம்புகின்றவர்களே அதிகம் தவிர, அந்த புலம்பல்களால், வேதனைகளால் எதுவும் கிடைக்கப்போவதில்லை என்பதை பார்க்கத் தவறிவிடுகின்றோம்.


அதேபோல எதிர்காலம், இது இப்படி நடந்துவிடுமோ என்ற எதிர்பார்ப்பு, அச்சத்தில் உளன்றுகொண்டு இல்லாத ஒன்றை கற்பனைக்குள் கொண்டு வந்து சேர்த்துக் கொண்டு இருக்கும் அனைத்தையும் ஒதுக்கிவிட்டு பயத்தில் வாழ்வை நகர்த்திக்கொண்டு இருக்கின்றோம்.


ஒரு விருந்து ஒன்றுக்காக ஆயிரங்களை செலவழித்து சென்ற ஒருவர், புகழ்பெற்ற ஒரு உணவகத்தில் “மெழுகுவர்த்தியுடன் இரவுணவை” ஆரம்பிக்கின்றார். (candle light dinner). அப்போது அவருக்கு மகிழ்ச்சி கிடைக்கின்றது. ஆனால் இதனையே மின்சாரம் அற்ற இரவுப்பொழுது ஒன்றில், தன்னுடைய வீட்டிலேயே செய்துவிட மறுப்பார். அவ்வாறான மின்சாரமற்ற பொழுதில் இருளை திட்டிக் கொண்டு, இல்லாதவற்றைப் புலம்பிக்கொண்டு இருப்பாரே தவிர அதன் பொழுதை ரசித்துவிட மாட்டார். இப்படித்தான் இதில் இதில் மட்டும் தான் வாழ்வு மகிழ்ச்சியாக இருக்கும் என்று நமக்கு நாமே ஒரு எதிர்பார்ப்பை உண்டாக்கிக் கொண்டு இருப்பதை தொலைத்துக் கொண்டு இருக்கின்றோம்.


எம்மில் எத்தனை பேர் வாழ்வில் சோகங்களையும், கிடைக்காத எதிர்பார்ப்புகளையும் மட்டுமே நினைத்து வாழ்வைத் தொலைத்துக் கொண்டு இருக்கின்றோம் எனப்பார்த்தால் ஏராளமானவர்கள் அப்படித்தான். என்றாலும் எதுவெல்லாம் கிடைத்துள்ளது அதனால் எத்தனை மகிழ்ச்சி கிடைத்தது என்பதை ஏற்கும் மனப்பக்குவத்தை அடைந்து விடுவதேயில்லை காரணம் நாம் பார்க்கும் விதம் அப்படி இருக்கின்றது.


எதிர்காலத்தில் இப்படி இருக்கவேண்டும் எனச் சிந்திப்பது தவறான விடயமல்ல. ஆனால் இப்படித்தான் இருக்கும் என்று கடந்தகாலத்தோடு அதனை ஒப்பிட்டு அச்சப்படுவதில் வாழ்வு தொலைந்து போகுமே தவிற வேறு எதுவும் நடக்கப்போவதில்லை. இதனால்தான் இந்த நொடி ஆனந்தமே என்று வாழப்பழகிக்கொண்டால் அதில் மகிழ்ச்சி மட்டுமே இருக்கும்.


எமக்கு தேவையான மகிழ்ச்சியும், வாழ்வும் எம்மிடம் மட்டுமே உள்ளது ஆனால் அதனை எற்று எங்கோ தேடி எதை எதையோ கற்பனைக்குள் புகுத்தி வாழ்வை புரிந்துகொள்ளாமல் வாழ்ந்து நம்மையும் தொலைத்து நமக்கு நாமே ஏமாற்றிக் கொண்டு இருக்கின்றோம் என்பதே உண்மை.


நீண்ட நாள் போதைக்கு அடிமையான ஒருவன் அதில் இருந்து மீண்டு வருகின்றான். காரணம் அவன் மனத்திடம். இதனை நாம் அறிவுரையாக ஏராளமானோருக்கு கூறுகின்றோம். அதே போலத்தான் வாழ்வு நமக்காக கொடுத்த சந்தோசத்தை ஒதுக்கிவிட்டு இல்லாதவற்றை மனத்திற்கு கொடுத்து வாழ்வை வீணடித்துக் கொண்டு இருக்கின்றோம் என்ற உண்மையை ஏற்றுக் கொள்ள மறுக்கின்றோம்.


இந்த காரணிகளில் முக்கியமானது காதல் என்றும் கூறலாம். ஒரு நேசம், காதல் அனைத்து மகிழ்வையும் தருகின்றது என்றால், அந்த காதல் தன்னையும் தன் சுற்றையும் உள்ள அனைத்திற்கும் மகிழ்வை, வாழ்வை தருகின்றது என்றால் அதுவே காதல் அதுவே நேசிப்பு. ஆனால் அதனை ஏற்றுக்கொள்ளாமல் மாயையிடம் சிக்கிக் கொள்கின்றோம்.


தேவையற்ற எதனையும் காலமோ வாழ்க்கையோ நம்மிடம் கொண்டு வந்து சேர்ப்பது இல்லை. பிடித்தலுக்கான எண்ணற்ற காரணங்கள் இருந்த போதும் வெறுத்தலுக்கான ஏதோ ஒரு சில காரணம் மட்டுமே மனதை ஆட்கொள்ளும். அது யாதார்த்தம்.


இங்கு எவருமே நூறு வீதம் மிகச் சரியானவர்கள் இல்லை. அடுத்த நிமிடமே வாழ்வை புதுப்பித்துக் கொள்ள முடியும் உத்தமம் அதுவே. சில சமயம் வாழ்வில் ஏராளமான முடிவுகளை எடுத்து இருக்கலாம் அது எமக்கும் எம்மைச் சுற்றி உள்ளவர்களுக்கும் வலிகளைக் கொடுத்திருக்கலாம். ஏன் எமக்கும் கூட. அது கடப்பு என்றும் கூற முடியும். இதுவரை நடந்தது போக இப்போதே வாழ்வை புதுப்பித்துக் கொண்டு வாழ்ந்துவிட முடியும்.


எப்போதுமே வாழ்வு தேங்கி விடுவதில்லை. நாம் செய்தது சரியா? பிழைகளைச் செய்து விட்டோமே என்று ஏராளமான கற்பனைகளை நமக்கு நாமே போட்டுக்கொண்டு எண்ணங்கள் சொல்வதைக் கேட்டு ஒரு குற்ற உணர்ச்சிக்கு உள்ளாகிக் கொண்டு அதனை உண்மையென நம்பிக் கொண்டு வாழ்வில் இருந்து மீண்டுக் கொள்ளாமல் அதனையே தொற்றிக் கொண்டு வாழ்வையும் நமக்கான தருணங்களையும் வீணடித்துக் கொண்டு இருக்கின்றோம்.


இப்போதே மீண்டு விடலாம். சரிகளையும் தவறுகளையும் கோர்த்து இது இப்படி அது அப்படி என குழப்பத்திற்கு உள்ளாகி வாழ்வை தொலைக்கப் பார்க்கின்றோம். உண்மையில் இக்கணமே வாழ்வை வாழப்போகின்றேன் எனக்கானதையும் என் சார்ந்த அனைத்திற்கும் எது மகிழ்வோ அதனைச் செய்யப்போகின்றேன். இதுவரை என்பதையும் அந்த எண்ணங்களையும் தூரவிரட்டி புதிதுக்கு வாய்ப்பளித்து வாழ்வை வாழப்போகின்றேன் என வாழும்போது வாழ்வு பிறக்கின்றது.


உண்மையில் அதற்கான எமக்கான இடத்தை நாம் கொடுக்காமல் பிடிவாதமாக பொய்யாக வலிகளை சேர்த்துக் கொண்டு வசந்தத்தை எதிர்த்து போராடிக் கொண்டு இருக்கின்றோம். இதில் முக்கியம் சரியானதையும் நமக்கானதையும் தேர்வு செய்துக் கொள்வது மாத்திரமே. அதனை விடுத்து எது எதனையோ கற்பனை செய்து இருக்கும் அனைத்தையும் இழந்து வாழ்வையும் உள்ள அனைத்து சந்தோசங்களையும் தொலைத்துக் கொள்வதும் ஒருவித கோழைத்தனமே.


எப்படி என்றாலும் இருக்கும் அனைத்தையும் அப்படியே கண்திறந்து பார்ப்போமானால் வாழ்வில் எப்போதுமே துன்பங்கள் ஏற்படுவதில்லை. கால்கள் இல்லாத ஒருவரை பார்க்கும் போது எமக்கு இருக்கின்றதே என்ற திருப்தி ஏற்படுமே, அப்படித்தான் இங்கு அனைத்துமே நம்மிடமே உள்ளது அதனை எடுத்துக் கொள்ளாமல் மாய உலகில் வாழ்ந்து கொண்டிருப்பதைத்தான் பலர் செய்கின்றார்கள்

ஏன் நாமும்தான்



அவமானம்

 


*சாதிக்க விருப்பமா?* *அவமானப்படுங்கள்!*


*என்னை*

*நானே, யார் என்று புரிய எனக்குத் தேவைப்படும்*

*ஓர் ஆயுதம் தான் அவமானம்.*


**இது உண்மை என்பது போல்,*


*அனைவரின் வாழ்விலும்*

*ஏதாவது ஒரு சம்பவம் நடந்திருக்கும்.*


*நம் மீது குப்பையையும் சாணத்தையும் கொட்டுகின்றனரே  என்று,*

*செடி ஒரு நாளும் நம்மைப் போல் ஆதங்கப்படுவதில்லை.*


*அழுது ஆர்ப்பாட்டம் செய்வதில்லை.*


*அந்தக் குப்பையை தனக்கான உயிர் சத்தாக எடுத்துக் கொண்டு,*


*பூக்களை, காய், கனிகளைத் தருவது இல்லையா!*


*நாம் அச்செடிப் போல இருக்க வேண்டாமா?*


*மற்றவர்களின் ஏளனங்களையும் அவமானங்களையும் உரமாக ஏற்று,

19 அக்டோபர் 2020

கவலை

 கவலை என்பது எல்லோரிடமும் இருக்கும் ஒருவித சொத்து. அதன் உருவங்கள் மாறலாம். ஆனால் அதன் அழுத்தம் ஒன்றாகவே இருக்கும். கவலையே இல்லாத மனிதர் யாருமே இல்லை. நமக்குத்தான் இவ்வளவு பெரிய சோகம் இருக்கிறதென்று பொதுவாக அனைவரும் எண்ணுகின்றனர். ஆனால் ஒவ்வரிடமும் ஒவ்வொரு விதத்தில் கவலையின் ஆட்சி இருக்கிறது.


    கவலை என்று அதையே நினைத்துக் கொண்டு இருப்பதை தவிர்த்து மனதின் திசைகளை மாற்றுங்கள். கொஞ்சம் சிரமமான காரியம்தான் இருந்தாலும் அதனைச் செய்தாக வேண்டும். மனம் தன் இயல்புகளை மாற்றிக் கொண்டே இருந்தால் கவலை என்ற பேய் விரட்டப்படுகிறது. சிலருக்கு லச்சியவெறி என்று ஒன்று இருக்கலாம். அதற்காக நம்மால் இது முடிகிற காரியமா….? என்று மலைத்து நிற்காமல் செயலில் இறங்க வேண்டும். இதுதான் மனதின் திசைமாற்றல் எனப்படும். இப்படி ஒவ்வொன்றாக மனதின் திசைகளை மாற்றிக் கொண்டே போனால் குறிப்பிட்ட இலக்கை கவலைகள் இன்றி அடையலாம். மனித சக்தியை மீறி எதுவுமே கிடையாது.


    கவலையற்ற மனிதர் உலகில் உண்டா? எல்லாருக்கும் கவலைகள் உண்டு. எதற்காக கவலை …? எப்படிப்பட்ட கவலை? என்பது மட்டும் மனிதருக்குள் மாறுப்படும். ஒரு நேரத்தில் மனிதனை ஆர்வத்தோடு இயங்க வைத்துக் கொண்டிருக்கும். சில நேரங்களில் விரக்தியில் படுகுழியில் தள்ளிவிடும்.


     கவலையில் வீழ்ந்து விடாமல் வீழ்கிற போதெல்லாமல் நம்பிக்கையுடனும், உற்சாகமாய் எழுந்துவிடுங்கள் பீனிக்ஸ் பறவையைப் போல். கவலையில் துன்பப்படும் எல்லோரும் உணர்ச்சி கொந்தளிப்பில் மூழ்கி விடுவது உண்டு. நன்றாக மூடப்பட்ட பாட்டிலில் காற்றைத் திணிப்பதைப் போன்று நமது உள்ளமாகிய பாட்டிலில் கவலைகளை அடைத்துத் திணித்துப் பூட்டி வைத்துக் கொள்ளக் கூடாது. அப்படிச் செய்தால் உள்ளத்தில் இருக்கும் கவலைகளின் காரணமாகச் சோர்வு, தோல்வி மனப்பான்மை, வாழக்கையின் மேல் விரக்தி முதலியவைகள் உண்டாகும். உங்களுடைய கவலைகளை உங்களுடைய நண்பர்கள், மனைவி, பெற்றோர்கள் மற்றும் உங்களை விரும்பும் மற்றவர்களிடம் பகிர்ந்து கொண்டால் கவலைகளின் சுமை குறையும்.


   கவலைப்படும்படி ஏதாவது நேர்ந்துவிட்டால் நம் கவலையிலிருந்து தப்பிச் செல்ல முயலவேண்டும். நண்பர்களுடைய வீட்டிற்குச் சென்று பேசிக் கொண்டிருக்கலாம் அல்லது சினிமாவிற்கு செல்லாம். உல்லாசப் பயணம் போகலாம். இதுபோன்ற எண்ணற்ற வழிகளில் நாம் சிறிது நேரம் செலவிட்டு கவலையை மறக்க முயற்சி செய்ய வேண்டும். அந்த நிலையில் உள்ளத்திற்கு ஓய்வு கிடைக்கிறது. கவலையை எதிர்த்து போராட மனதில் உற்சாகம் பீறிடும்.


    அனைவருடைய உள்ளங்களிலும் எப்போதும் ஏதோ கவலைகள் குடிகொண்டிருக்கின்றன. கவலைப்படும் சமயங்களில் நம்மை நாமே கேட்டுக் கொள்ளலாம். அதாவது நான் எதற்காகக் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறேன். இது தேவைதானா….? இப்படி கேட்டு பார்த்தால் கவலைப்படும் விஷயங்கள் பெரும்பாலானவை கவலைப்படத் தேவையற்ற சில அர்த்தமற்ற விசயங்களாக தென்படும். கவலைகள் மலையாக உருவெடுத்து, தன் மேல் அமர்ந்திருப்பதைப் போன்ற மனநிலையை வளர்த்தல் கூடாது. கவலைகளுடன் போராடி அவைகளை எப்படியும் வெல்ல முயற்சி செய்வது சாலச்சிறந்தது.


     எதற்கும் உற்சாகமிழந்து விடாதீர்கள். உலகம் இருக்கிறது.நாட்கள் இருக்கின்றன. எதை இழந்தாலும் எதிர்காலம் இருக்கிறது. வாழக்கை கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்து கிடக்கின்றது. நாம் அடைய வேண்டிய இலக்கை நோக்கிய பயணத்தில் எதிர்படுகின்ற தடைகளும், போராட்டங்களும் தான் வாழ்க்கை. கவலைகளை வளர விடாதீர்கள்.


  ஒரு நாளும், ஒரு வாரமும், ஒரு மாதமும், ஒரு வருஷமும் கவலைப்பட்டுக் கொண்டிருக்காமல் இது நம்மால் முடியும், நிச்சயம் முடியும் என்கிற அழுத்தமான மனக்கட்டளையிடுங்கள். முதலில் பூ… பூக்கும் பிறகு காயாகி அதன்பின் தானே கனியாகும். எனவே எப்போதும் எதிலும் வெற்றியை குறி வைத்து செயல்படுங்கள். நிச்சயம் கனி கிடைக்கும். கனவு காணுங்கள் வெற்றி நிச்சயம்.



16 அக்டோபர் 2020

பயம், பதற்றம்.தவிர்ப்பது எப்படி?

 




சிலர் எப்போதாவது பதற்றமடைகின்றனர்; சிலர் எடுத்ததற்கு எல்லாம் பதற்றம் அடைகின்றனர். ஆக மொத்தத்தில் இந்த பயம், பதற்றம் ஆகியவை நம்மை கீழே இழுக்கும் சக்திகளாகவே எப்போதும் உள்ளன. பயத்தையும் பதற்றத்தையும் பற்றி மருத்துவ ரீதியாக தெரிந்து கொண்டால், அதனைக் கடப்பது சுலபமாகும் அல்லவா?! இங்கே தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்!


பயமான அல்லது கஷ்டமான சூழ்நிலைகளில் இருக்கும் போது, நாம் எல்லோருமே பதற்றம் (Anxiety) அடைந்து இருப்போம். இது இயற்கை. அதே சூழ்நிலைகள் நமக்குப் பழகும் போதோ, மாறும் போதோ அல்லது அதிலிருந்து விலகும் போதோ பதற்றமும், பயமும் நம்மை விட்டுப் போய் விடுகிறது.


கஷ்டமான சூழ்நிலையிலிருந்து விலகிய பின்னும் பதற்றம் தொடர்ந்து நீடித்தாலோ, திடீரென காரணமில்லாமல் ஏற்பட்டாலோ அல்லது அதன் வீரியம் அதிகரித்தாலோ, அது அன்றாட வாழ்க்கை முறையில் பெருமளவில் பாதித்து உடல், மன நலக் கேடுகளை விளைவிக்கிறது.


பலருக்கு, குறிப்பாக, பெண்களுக்கு இந்தப் பிரச்சினை இருப்பினும், பெரும்பாலானோர் உதவி பெறுவதில்லை.


பதற்றம் உடலுக்குக் கெடுதலா?

ஓரளவு பதற்றம் நல்லது. அன்றாட வாழ்க்கைக்கு உபயோகமானதும் கூட! இது எதிர்பாராத ஆபத்திலிருந்தோ, தாக்குதலிலிருந்தோ நம்மைக் காப்பாற்றுவது மட்டுமின்றி, கவனத்துடன் இருக்கச் செய்து, வேலைகளைத் திறம் படச் செய்ய உதவுவதுடன், பிரச்சினைகளைச் சமாளிக்கத் தூண்டுகோலாகவும் இருக்கிறது.


ஆனால் எல்லா நேரமும் பதற்றமாக இருக்கும் போது உடல், மனஅளவில் பல உபாதைகள் ஏற்படும் வாய்ப்பு அதிகம்.


‘பேனிக் அட்டாக்’ (Panic Attack) குறுகிய கால அவகாசத்துக்குள் (10 நிமிடங்களுக்குள்) பதற்றத்தின் அறிகுறிகள் பன்மடங்காக உச்சத்தை அடையும். மூச்சடைப்பு, மூச்சுத் திணறல், சாகப் போவது போன்ற உணர்வுகள் ஏற்படும்.


ஃபோபியா (Phobia) அதிக பயம்

மற்றவர்கள் சாதாரணம் என்று நினைக்கக் கூடிய சூழ்நிலைகள், குறிப்பிட்ட சில இடங்கள், பொருட்கள் அல்லது மிருகங்களிடம் சிலருக்கு அளவு கடந்த பயம் இருக்கும். அதிக ஜன நெரிசல் கொண்ட இடங்களையோ அல்லது எளிதில் வெளியே செல்ல முடியாத இடங்களையோ (உதாரணமாக ரயில், பேருந்து) கூட சிலர் தவிர்க்க நினைப்பார்கள்.


ஆனால் இவ்வாறு தவிர்ப்பது, பயத்தையும், பதற்றத்தையும் அதிகரிக்கச் செய்யுமே தவிர, குறைக்காது. பதற்றப் படுவோம் என்று ஒவ்வொரு சூழ்நிலையையும் தவிர்த்தால் அதிலேயே பொழுது கழிந்து விடும். வாழ்க்கை இன்னமும் சிக்கலாகத் தான் போகும்.


*பதற்றமும் உடல் நலமும்*:


பதற்றம் பல உடல் உபாதைகளுடன் தொடர்பு உடையது. பதற்றம் அதிகரிக்க அதிகரிக்க, இந்த அறிகுறிகளும் தீவிரமாகி உடலளவில் நெஞ்சு படபடப்பு, மூச்சு வாங்குதல், மயக்கம், அஜீரணம், குமட்டல், வாந்தி, வயிற்றுப் போக்கு, அடிக்கடி சிறுநீர் கழித்தல், உடலில் வலி, சோர்வு, நடுக்கம், முகம் வெளிறிப் போதல், வியர்த்தல், மரத்துப் போதல், வாய் உலர்தல், தூக்கமின்மை போன்றவை ஏற்படும்.


எப்பொழுதும் கவலையுடன் இருத்தல், கவனம் செலுத்துவதில் சிரமம், எளிதில் எரிச்சலடைவது, மனச் சோர்வு போன்ற மன உபாதைகளும் ஏற்படும்.


பதற்றம் காரணமாக வரும் உடல், மன உபாதைகள் வேறு சில நோய்களுக்கும் பொதுவானவையாக இருக்கின்றன. எனவே பதற்றம் காரணமாக இந்த உபாதைகள் வரும் போது, வேறு ஏதோ நோய் வந்து விட்டதாக தவறாகக் கணிக்கக் கூடாது.


பதற்றம் ஏற்படக் காரணங்கள்

மரபு வழி காரணங்கள் முக்கியமானவையாகக் கூறப் படுகின்றன. குடும்பத்தினர் யாருக்காவது இது இருந்தால், மற்றவருக்கும் வரும் வாய்ப்பு அதிகம்.

மூளையில் உள்ள சில புரதங்கள் குறைவினாலும் பதற்றம் ஏற்படலாம்.

வாழ்க்கையில் ஏற்படும் சில நிகழ்வுகள், உதாரணமாக, விபத்து, இறப்பு போன்றவை மனதளவில் தாக்கத்தை ஏற்படுத்தி, பதற்றத்தை அதிகப் படுத்தும். மன அழுத்தமும் பதற்றத்தை அதிகரிக்கும். பதற்றத்தில் இருந்து எப்படி வெளி வருவது?


புரிந்து கொள்ளுதல்

உடலளவிலும், மனதளவிலும் ஏற்படும் பதற்றத்தின் அறிகுறிகள், எந்த விதமான சூழ்நிலையில் ஏற்படுகிறது, எவ்வளவு நேரம் நீடிக்கிறது, எப்படிச் சரியாகிறது என்பதில் கவனம் செலுத்த வேண்டும். இதை தினமும் எழுதி வைப்பதன் மூலம் உங்கள் பதற்றத்தைப் பற்றிய புரிதல் அதிகமாகும். அதை எப்படிச் சரி செய்வது என்றும் பார்க்க முடியும்.


உணவு முறை


அதிகமாக காபி பருகுவது பதற்றத்தை அதிகரிக்கும்.


பழக்கம்


புகை பிடித்தல், மது அருந்துதல் பதற்றத்தை அதிகரிக்கும்.


வாழ்க்கை முறை


எப்பொழுதும் தளர்வு நிலையில் இருப்பது, உங்களுக்கு ஏற்படும் மன உளைச்சல், மன அழுத்தத்தின் காரணம் அறிந்து திறம் பட சமாளிப்பது பதற்றத்தைச் சரி செய்ய உதவும்.


பதற்றம் அதிகமாக இருந்தால் மருத்துவரை அணுகவும். மருந்துகள் தவிர கௌன்சலிங் (Counselling), காக்னிடிவ் பிஹேவியர் தெரபி (Cognitive Behaviour Therapy) என பல விதமான கலந்தாய்வு சிகிச்சைகள் உள்ளன.


உடற் பயிற்சி, யோகா போன்றவையும் பெரிதும் உதவும். ஒரு நாளைக்கு 30 நிமிடம் விகிதம் வாரத்திற்கு 5 முறையாவது உடற் பயிற்சி செய்ய வேண்டும்.


யோகா எவ்வாறு உதவுகிறது?


ஆசனம், மூச்சுப் பயிற்சிகள், தியானம் அனைத்துமே பதட்டத்தைப் பெருமளவில் குறைக்கும் என ஆய்வுகள் கூறுகின்றன.

பதற்றத்திற்குக் காரணமாகக் கூறப் படும் புரதக் குறைவுகளை யோகா சரி செய்வதாக ஆய்வுகள் கூறுகின்றன.

யோகப் பயிற்சிகளால் உடலும், மனதும் எப்பொழுதும் தளர்வு நிலையில் இருப்பதால் எளிதில் பதற்றம் அடைய மாட்டோம்.

யோகா, விழிப்புணர்வை அதிகரிப்பதால் உடலிலும், மனதிலும் ஏற்படும் நிகழ்வுகளில் அதிக கவனத்துடன் இருக்க முடிகிறது. பதற்றத்தின் அறி குறிகளைக் கண்டறிந்து சரி வரக் கையாள முடிகிறது.


நிதானம்

 




உலகத்துலேயே நாம விரும்பாத ஒன்னு, நமக்கு இலவசமா கிடைக்குது'னா அது அட்வைஸ் ஒன்னு தான்.


நம்மை பிடிக்காத உறவினர்களிடம் பேசும் போது நாம் எப்படி வார்த்தைகளை கவனமாக தேர்ந்தெடுத்து பேசினாலும், இறுதியில் அதை அப்படியே திசை திருப்பி விடுகிறார்கள்.


இன்றைய மனிதர்களிடம் படிப்பு அதிகமாக இருக்கிறது. ஆனால் பண்பாடு குறைவாக இருக்கிறது. இது தான் இன்றைய நெருக்கடிகளுக்கு எல்லாம் மூலக் காரணம். படிப்பதோடு பண்பாட்டையும் நாம் அடுத்த தலைமுறைக்கு கிடைக்க முயற்சி செய்வோம்.


கொஞ்சம் வைத்திருப்பவன் ஏழையல்ல. அதிகம் விரும்புகிறவன் தான் ஏழை.


கணவன், மனைவி, குழந்தைகள், உறவினர்கள், நண்பர்கள் என பலரிடமிருந்து எவ்வளவு சங்கடங்கள் வந்தாலும், நிதானமாக பிரச்சினைகளை அணுகி வெற்றி காண்பவர்களே சிறந்த மனிதர்கள்.




15 அக்டோபர் 2020

பெறுமதி

 


கருத்ததரங்கொன்றில் பேச எழுந்த பிரபல பேச்சாளர் ஒருவர், தங்க மோதிரமொன்றைத் தூக்கிப் பிடித்துச் சபையோருக்குக் காட்டினார். "இது சுத்தமான 22 கரட் தங்கத்தினாலான மோதிரம். இதனைப் பெற்றுக்கொள்ள விரும்புபவர் யார்?" என அவர் அங்கு குழுமியிருந்தவர்களிடம் கேட்டார். சபையில் கைகள் ஒவ்வொன்றாய் உயரத் தொடங்கின.


பின்னர் அவர் மெழுகுவர்த்தியொன்றை எரியச் செய்து குறடு ஒன்றின் உதவியுடன் அந்த மோதிரத்தை மெழுகுவர்த்திச் சுவாலையில் பிடித்தார். சிறிது நேரத்தில் புகைக்கரி பட்டு அம்மோதிரம் முற்றிலும் கறுப்பாக மாறியது. "இப்போது இதனைப் பெற்றுக் கொள்ள யார் விரும்புகிறீர்கள்?" எனப் பேச்சாளர் கேட்டார். சபையிலிருந்த அனைவருமே கை உயர்த்தினர்.


"நல்லது. நான் செய்வதைக் கொஞ்சம் கவனியுங்கள்" என்று கூறிய பேச்சாளர், தனது கையிலிருந்த மோதிரத்தைக் கீழே போட்டுப் பாதணியினால் மிதித்து நன்றாக தரையில் அழுத்தித் தேய்த்தார். பின்னர் அதனை உயர்த்திப் பிடித்து, "இப்போது இதனைப் பெற விரும்புபவர் யாரும் உண்டா?" எனக் கேட்டார். அப்போதும் சபையில் இருந்த அதிகமானோர் தம் கைகளை உயர்த்தினர்.


"சரி, இப்போது நான் செய்வதைப் பாருங்கள்!" எனக் கூறிய அவர் அந்த மோதிரத்தைக் கீழே போட்டு ஒரு சுத்தியலால் அடித்து உருக்குலையச் செய்தார். தகர்ந்து உருக்குலைந்துபோன அந்த மோதிரத்தைத் தூக்கிப் பிடித்த அவர், "இனிமேலும் யாராவது இதனைப் பெற்றுக்கொள்ள விரும்புகிறீர்களா?" என்று கேட்டார். அப்போதும் முன்போலவே கைகள் உயர்ந்தன.


பின்னர் அவர் சபையோரைப் பார்த்துப் பேசத் தொடங்கினார்: "நண்பர்களே! உங்களுக்கு ஒரு நல்ல படிப்பினையை வழங்குவதற்காகவே நான் இதனைச் செய்தேன். பாருங்கள்! நான் இந்த மோதிரத்துக்கு என்ன ஆக்கினை செய்த போதிலும் நீங்கள் அதனைப் பெற்றுக்கொள்ளவே விரும்புகிறீர்கள். ஏனெனில் நான் கொடுத்த வதைகளினால் இந்த மோதிரத்தின் பெறுமதியில் எவ்விதக் குறைவும் ஏற்படவில்லை.


“இதே போன்று உங்கள் வாழ்க்கையிலும் நீங்கள் எடுக்கும் தீர்மானங்கள் காரணமாக அல்லது நீங்கள் எதிர்கொள்ளும் சூழ்நிலைகள் காரணமாக உங்கள் மீதும் கரி பூசப்படலாம்; நீங்கள் கீழே போட்டு மிதிக்கப்படலாம் அல்லது அடித்து நொறுக்கப்படலாம். இந்த மாதிரியான நிலைமைகளில் நீங்கள் உங்களைப் பற்றித் தாழ்வாக மதிப்பிட்டுவிடக் கூடாது. ஏனெனில், அப்படி என்ன நடந்தாலும் உங்கள் பெறுமதி ஒருபோதும் குறையாது. 


“நீங்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் விசேடமானவர். அதனை ஒருபோதும் மறந்து விடாதீர்கள். நேற்றைய ஏமாற்றங்கள் நாளைய கனவுகளை நசுக்கிவிட ஒருபோதும் இடம் கொடுக்காதீர்கள்."