20 அக்டோபர் 2023

எமது உடன்பிறப்புகளே

 



1.1 மில்லியன் மக்களை, வடக்கு காஸாவிலிருந்து வெளியேறச் சொல்லியிருக்கிறது இஸ்ரேல். அதற்கு வெறும் 24மணி நேர அவகாசமே கொடுத்திருக்கிறார்கள்.
மூர்க்கமான வான்வழித் தாக்குதலை அது இன்னும் நிறுத்தவில்லை.

காஸா எல்லாத் திசைகளிலும் முற்றுகையிடப்பட்டிருக்கிறது. 'மனிதாபிமான வழிப்பாடு' ஒன்றைத் திறந்து விடுமாறு கோரியும், அது செவிடன் காதில் ஊதிய சங்காகவே உள்ளது.

அகப்பட்ட வாகனங்களிலும் கார்களிலும் கழுதை வண்டிகளிலும் கால்நடையாக நடந்தும், பல்லாயிரக் கணக்கானோர் போய்க் கொண்டிருக்கிறார்கள்.
அவர்களுள் வயோதிபர்கள், பெண்கள், குழந்தைகள், நோயாளிகள் என்று எல்லோருமே அடக்கம்.

எங்கே போகிறோம் என்று தெரியாமல், போக்கிடமின்றிப் போய்க் கொண்டிருக்கிறார்கள் அவர்கள். மேலும்
பல்லாயிரக் கணக்கானோர், தத்தமது வீடுகளை விட்டு வெளியேறாமல், வருவது வரட்டும் என்றிருக்கிறார்கள்.

காஸா ஏற்கனவே சன அடர்த்தி மிக்க பிரதேசம். உலகின் மிகப் பெரிய திறந்தவெளிச் சிறைச்சாலை. தெற்கு காஸாவில் போதியளவு உட்கட்டுமானங்கள் கூட இல்லை. அங்கே போய் என்ன செய்வது? இந்தக் கேள்விக்கு யாருக்குமே விடை தெரியவில்லை.

இலட்சக் கணக்கானோரை அகதி முகாம்களில் வைத்துப் பராமரிக்க முடியாது. உணவு, சுத்தமான குடிநீர், கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகளைச் செய்வது கூட, மிகப் பாரிய சவாலாகவே இருக்கப் போகிறது.

சிலர் காயப்பட்டோரைத் தூக்கிக் கொண்டு நடக்கும் காட்சிகள் மனதை உலுக்குகின்றன.

இத்தனை அவலங்களுக்கும் மத்தியில், வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருப்போரை, கைவிட்டுச் செல்ல முடியாது என்ற மனிதாபிமானக் குரல்களும் கேட்கின்றன.
அதாவது, மனிதாபிமானத்திற்காக தங்களது உயிர் போனாலும் பரவாயில்லை என்று சொல்கிற மருத்துவ உதவியாளர்களை, தொண்டர்களை நினைக்கும்போது நெஞ்சம் விம்முகிறது.

தொடரும் வான்வழித் தாக்குதலோடு சேர்த்து, இப்போது தரைவழித் தாக்குதலும் தயார்நிலையில் உள்ளது.

காஸாவில் பாரிய இனப்படுகொலை நடந்து கொண்டிருக்கிறது; இன்னும் நடக்கத்தான் போகிறது. போருக்கும் சில விதிகள் உள்ளன. வேண்டுமென்றே அவை மீறப்படுகின்றன. அடிப்படை மனிதாபிமானம் கூட மறுக்கப்படுகிறது.

கண் முன்னே போர்க்குற்றம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.
போரின் அத்தனை பரிமாணங்களும், ஒரே நேரத்தில் வெளிப்படத் தொடங்கியிருப்பது நெஞ்சை உலுக்குகிறது.

எத்துணை பாரிய மனிதாபிமான நெருக்கடி இது? சகிக்க முடியாத மனிதப் பேரவலமேயன்றி வேறென்ன?

ஐ.நா சபை கையாலாத ஒரு சபையாகவே இருக்கிறது.  உலக அரசாங்கங்கள் பல, தத்தமது பக்கச் சார்பான அரசியல் நிலைப்பாடுகளால், அநீதிக்கு ஒத்தூதுகின்றன. சர்வதேச அரசியலின் அறம் பிழைத்த இருண்ட பக்கங்களே மீண்டும் மீண்டும் வெளித்தெரிகின்றன. இது வரலாற்றுத் துரோகமேயன்றி வேறென்ன?

மக்கள் வெளியேறச் சாத்தியமாக இப்போதுள்ள ஒரேயொரு தரை வழி, றஃபா கடவை மட்டும்தான். எகிப்தின் சினாய் எல்லைப் பிரதேசத்திலுள்ள அதுவும் மூடப்பட்டிருக்கிறது.

போக்கிடமின்றி அலைந்து கொண்டிருக்கிறது ஒரு பெரும் மக்கள் கூட்டம். சொந்த நாட்டிலேயே அகதிகளாய் இருப்பதுதான் பலஸ்தீன மக்களின் தொடர் தலைவிதியா என்ன?

நம் கண் முன்னே, வரலாற்றின் மிகக் கசப்பான வன்கொடுமைகள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.
இந்த மாபெரும் மனிதாபிமான நெருக்கடியிலிருந்து மீள வழி வேண்டும்.

அடக்குமுறைக்கு உள்ளாகியிருக்கும் பலஸ்தீன மக்களே, நாங்கள் உங்களோடுதான் இருக்கிறோம். ஒவ்வொரு நிமிடமும் உங்களை எண்ணி எண்ணியே கழிகிறது.
உங்களை நினைந்து அழுகிறோம். நீங்களே எங்களது பிரார்த்தனைகளை நிறைத்திருக்கிறீர்கள்.

உங்களுக்கு நீதி கிடைக்கட்டும்.
இறைவனின் உதவியும் நெருங்கிய வெற்றியும் மீட்சியும் உங்களுக்குக் கிடைக்கட்டும்.