13 செப்டம்பர் 2022

ஒன்பதாம் திகதி

 ஆட்சியாளர்களுக்கு கெட்ட நாள் என்று நம்பப்பட்ட ஓகஸ்ட் ஒன்பதாம் திகதி போராட்டக்காரர்களுக்கே கெட்ட நாளாக முடிந்து விட்டதா?


ராஜபக்சக்களைப் போல ரணில் விக்கிரமசிங்க மந்திரம்,பில்லிசூனியம்,எண்ஜோதிடம் போன்றவற்றில் நம்பிக்கை கொண்டவர் அல்ல. ஆனால் ஆளுங்கட்சி அரசியல்வாதிகளின் வீடுகளை எரித்த ஆர்ப்பாட்டக்காரர்கள் அவ்வாறு மந்திரம்,மாயம்,பில்லிசூனியம்,எண் ஜோதிடம் என்பவற்றில் நம்பிக்கை கொண்ட ஒரு சமூகத்தின் கூட்டு உளவியலுக்குள் இருந்து வருகிறார்கள். அக்கூட்டு உளவியல் காரணமாகத்தான் மே மாதத்தில் இருந்து தொடங்கி ஜூலை மாதம் வரையிலுமான ஒவ்வொரு ஒன்பதாம் திகதியும் அரசியல்வாதிகளுக்கு கெட்ட நாட்களாக காணப்பட்டன.எனவே அந்த நம்பிக்கையை முறியடிக்க வேண்டிய தேவை ரணிலுக்கு இருந்தது. அவர் அதை வெற்றிகரமாக செய்திருக்கிறார்.கடந்த ஒன்பதாந் திகதி ரணில் அகற்றப்படவில்லை,மாறாக கோட்டா கோகம கிராமம் காலி முகத்திடலில் இருந்து வெளியேறியது.


தொடர்ச்சியான கைது நடவடிக்கைகளால் அரகலய பெருமளவுக்கு செயலிழந்து விட்டது.இதுவரை எவ்வளவு பேர் கைது செய்யப்பட்டார்கள் என்பது போராடும் தரப்புக்கே தெளிவில்லாமல் இருக்கிறது.ஒரு மையத்திலிருந்து தகவல்களைத் திரட்டமுடியாத அளவுக்கு மையம் இல்லாத,தலைமை இல்லாத ஒரு போராட்டமாக அது அமைந்திருந்ததா? யார் யார் கைது செய்யப்படுகிறார்கள் என்பதைத் தொகுத்துக் கூறமுடியாத ஒரு நிலை.


ராஜபக்சக்கள் அகற்றப்படும் வரை போராட்டத்தின் கவசம் போல காணப்பட்ட சட்டத்தரணிகள் அமைப்பு ரணில் வந்தபின் போராட்டத்தை ஏறக்குறைய கைவிட்டுவிட்டது.இளம் சட்டத்தரணிகள் சிலர் மட்டும் கைது செய்யப்படுகிறவர்களுக்காக நீதிமன்றங்களில் தோன்றுகிறார்கள்.


மேலும் ஒன்பதாம் திகதியையொட்டி பிணையில் விடுவிக்கப்பட்டவர்கள் போலீஸ் நிலையங்களில் வாக்குமூலம் அளிப்பதற்காக அழைக்கப்பட்டார்கள்.  வாக்குமூலம் வழங்குவதிலேயே ஒரு நாளின் ஏறக்குறைய அரைவாசி கழிந்து விட்டது.இவ்வாறு போலீஸ் நிலையத்தில் மினக்கெடும் பொழுது போராட்டத்தை எப்படி ஒழுங்கமைப்பது?


போராட்டத்தின் பக்கபலமாக காணப்பட்ட தொழிற்சங்கங்களையும் ரணில் வெற்றிகரமாகப் பிரித்துக் கையாண்டு விட்டார். சில கிழமைகளுக்கு முன் அரகலயவில் காணப்பட்ட ஒரு தொழிற்சங்கத் தலைவர் இப்பொழுது அரசாங்கத்தின் பக்கம் வந்து விட்டார்.


மொத்தத்தில் ரணில் விக்கிரமசிங்க தன்னை நோக்கி வந்த ஒன்பதாம் திகதியை போராட்டக்காரர்களுக்கே தோல்விகரமான ஒரு நாளாக மாற்றி விட்டாரா?


மன்னர்களுக்கு எதிராகத் தொடங்கிய பிரெஞ்சுப் புரட்சியின் விளைவாக மேலெழுந்த நெப்போலியன், புரட்சியின் கனிகளை சுவீகரித்துக் கொண்டு தன்னைப்  பேரரசனாக முடி சூட்டிக்கொண்டார்.ஏறக்குறைய ரணில் விக்கிரமசிங்கவும் அப்படித்தான்.அரகலயவின் கனிதான் அவர். அதேசமயம் அரகலயவை முறியடித்தவரும் அவரே.அரகலயக்காரர்கள் அமைப்பு மாற்றத்தைக் கேட்டார்கள். ஆனால் அதே அமைப்பு புதிய ஜனாதிபதியின் கீழ் தன்னை பாதுகாத்துக் கொண்டுவிட்டது. அதே நாடாளுமன்றம்;அதே தாமரை மொட்டுக் கட்சி;அதே பெரும்பான்மை;அதே அமைச்சர்கள்.


2015 ஆம் ஆண்டு மேற்கு நாடுகளும் இந்தியாவும் இணைந்து, பல சந்திப்புகளை நடத்தி,பல்வேறு வகைப்பட்ட முகவர்களைக் கையாண்டு, ராஜபக்ஷ அணிக்குள் பிளவை ஏற்படுத்தி,ஓர் ஆட்சி மாற்றத்தைச் செய்தன. அந்த ஆட்சி மாற்றத்தின் பங்காளிகளில் ஒருவராகிய மைத்திரி அதனை 2018 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் காட்டிக்கொடுத்தார்.இப்பொழுது நான்கு ஆண்டுகளின் பின் கத்தியின்றி,ரத்தமின்றி,தேர்தல் இன்றி ஒரு ஆட்சி மாற்றத்திற்கான நம்பிக்கையூட்டும் தொடக்கமாக மேற்கு நாடுகள் இதை பார்க்குமா?


31 ஜூலை 2022

சிந்திப்பதற்கு மட்டும்

  


*கணவன் மனைவியைவிட உயர்வாக இருக்க வேண்டியவை மூன்று.*

1. வயது,

2. அறிவு,

3. பணம்.

*மனைவி கணவனை விட உயர்வாக இருக்க வேண்டியவை ஐந்து.*

1. பொறுமை,

2. சுத்தம்,

3. அன்பு,

4. திட்டமிடுதல்,

5. பிரார்த்தனை. 

*இருவரும் சமமாக இருக்க வேண்டியவை மூன்று.*

1. புரிதல்,

2. சகித்தல்,

3. மதித்தல்.


யாரெல்லாம் நம்மோடு இருப்பார்கள், விலகுவார்கள் என்று காலம் முடிவு செய்வதில்லை.

*அவரவர்களின் வார்த்தையும், நடத்தையும் தான் முடிவு செய்கிறது.*


வாய் தவறி விழும் பேச்சுக்கள். கை தவறி விழும் கண்ணாடியை விட கூர்மையானது.

*யாரிடம் பேசுகிறோம் என்பதை விட என்ன பேசுகிறோம் என்பதை அறிந்து கொண்டு பேசுங்கள்.*


நிம்மதியுடன் வாழ்கிறேன் என யாராலும் எளிதில் சொல்லப்படுவதில்லை.

*வாழ்க்கை அவ்வளவு எளிதில் நிம்மதியை யாருக்கும் தந்து விடுவதில்லை.*


மற்றவர் தவறைக் கவனித்துக்கொண்டே இருப்பவர்கள்.

*தன் தவறுகளை வளர்த்துக் கொண்டே இருக்கிறார்கள்.*


பணம் இருந்தால் நீ  உயர்ந்தவன்  

குணம் இருந்தால் நீ *குப்பை.*

நடித்தால் நீ *நல்லவன்.*

உண்மை பேசினால் *பைத்தியக்காரன்.*

அன்பு காட்டினால் *ஏமாளி.*

எடுத்துச் சொன்னால் *கோமாளி.*


இறைவன் தனக்குப் பிடித்தவர்களுக்கே அதிகப் பொறுப்புகளை கொடுத்து.

அதன் பொருட்டு சோதனைகளை ஏற்படுத்தி.

பக்குவத்தையும், நிதானத்தையும் பரிசளிக்க விரும்புகிறான் 


நிலவை....தூரத்தில் இருந்து ரசிப்பதை போல. 


சில உறவுகளையும்..... தூரத்திலிருந்து ரசிக்க கற்றுக்கொள்ள வேண்டும்.

*சில வலிகள் இல்லாமல் இருக்க.*


தன்னுடைய செயலும் தன்னுடைய வார்த்தைகளும் மட்டும்தான் சரியன்று வாதாடுபவர்கள் மத்தியில் .

அமைதி மட்டும் உன் ஆயுதமாக வைத்துக்கொள்.

*அவர்களுக்கு புரியவைக்க.*

*வரும் காலம் ஒன்று உள்ளது.*

*சிந்தித்து செயல்படு இதுவும் கடந்து போகும்.*


நிலையென்று ஒன்றுமில்லை இவ்வுலகில்.

*ஒவ்வொரு சோகமும், துன்பமும் வாழ்க்கையில் நல்ல பாடத்தை கற்று தரவே வருகின்றது.*


 யாரும் உன் கண்ணீரை பார்ப்பதில்லை.

யாரும் உன் கவலைகளை பார்ப்பதில்லை.

யாரும் உன் வலிகளை பார்ப்பதில்லை.

*ஆனால் எல்லோரும் உன் தவறை மட்டும் பார்ப்பார்கள்.*


மனிதனும் வாழை மரமும் ஒன்று தான்.

தேவைப்படும் வரை வைத்திருப்பார்கள்.

*தேவை முடிந்தவுடன் வெட்டி வீசி விடுவார்கள்.*


இந்த பதிவு எல்லோருக்கும் பொருந்தும் என்பதால் பதிவிட தோன்றியது.

15 ஜூலை 2022

சஜித்தின் அரசியல் எதிர்காலம் ரணிலின் கைகளில்- அடுத்து என்ன செய்ய வேண்டும் ?



இலங்கையின் அரசியல் இப்போது மிகப்பெரிய பேசுபொருளாக மாறியிருக்கிறது, 24 மணிநேரமும் ஆச்சரியங்களுக்கும், அதிர்ச்சிகளுக்கும் பஞ்சமில்லாமல் நாட்கள் நகர்ந்து கொண்டிருக்கின்றன.


நவீன துட்டகைமுனு என போற்றித்துதிக்கப்பட்ட கோட்டபாய ராஜபக்சவின் வீழ்ச்சியும், ஒற்றை ஆசனமும் இல்லாமல் தோற்கடிக்கப்பட்ட ரணிலின் திடீர் எழுச்சியும் இருவேறு பயணப்பாதைகளையும் ,பட்டவர்த்தனமான உண்மைகளையும் உரக்க கற்றுத் தந்திருக்கின்றன.


இதனாலும், இதன் பின்னரும் நாட்டில் பலவித அரசியல் மாற்றங்களுக்கான புதிய புதிய பாதைகள் திறக்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் உருவாகியுள்ளதோடு, சிலரது அரசியல் எதிர்காலம் என்பது சூனியமாக்கப்படவுள்ளது என்பது திண்ணம்.


கோட்டா சாம்ராஜ்ஜியத்தின் சரிவு என்பது அவர்களாலேயே தேடிக்கொள்ளப்பட்டது என்றாலும், இதற்க்கு இடைநடுவே சிக்கப்போகும் சஜித்தின் எதிர்காலம் என்பது திடீர் திருப்பத்துக்குரியது.




அடுத்து சஜித் எப்படி தன் காய்களை நகர்த்த வேண்டும் என்பதே இந்த பதிவின் முக்கிய நோக்கமாகும்.


வாழ்க்கை பலருக்கும் ஏராளமான சந்தர்ப்பங்களை உருவாக்கி கொடுப்பதில்லை, கிடைக்கும் சந்தர்ப்பங்களை சரியாக திட்டமிட்டு பயன்படுத்திக் கொள்பவர்களே உலகில் வெற்றியாளர்களாக கொண்டாடப்படுகிறார்கள்.


இங்கேதான் ரணில் வெற்றியாளராகவும், சஜித் வெற்றியை கோட்டைவிட்டவராகவும்  எங்களால் நோக்கப்படுகின்றார், அதற்கு காரணம் சஜித் சந்தர்ப்பத்தை சரியாகவும், சாதுரியமாகவும் பயன்படுத்த தவறியமையே.


இன்று ரணிலுக்கு வாய்த்திருக்கும் அத்தனை வாய்ப்புக்களையும் கைப்பற்றி, பதில் ஜனாதிபதி இருக்கையிலும் கூட இருந்திருக்க வேண்டியவர் சஜித் பிரேமதாசவே.


கோட்டா அன்று சர்வகட்சி ஆட்சிக்கு முதலில் அழைத்தது SJB யைத்தான், ஆனால் விடாப்பிடியாக கோட்டா பதவி விலகினால்தான் ஆட்சிப் பொறுப்பை ஏற்பேன் என்று சிறுபிள்ளைத்தனமான கோரிக்கையை முன்வைத்து வாய்ப்பை தட்டிக்கழிக்கிறார்.


சாணக்கிய அரசியல்வாதியான ரணில், Gottagogama போராட்டக்காரர்கள் மீது நீங்கள் கைவைக்க கூடாது எனும் உறுதிமொழியை வைத்துக்கொண்டு ஆட்சிப்பீடமேறுகிறார் , போராட்டக்காரர்கள் மீது கைவைக்காமல் விட்டால், கோட்டா எப்படியும் வீட்டுக்கு போகவேண்டிவரும் என்றும், இயல்பிலேயே நிறைவேற்றதிகார கதிரையை எட்டிவிடலாம் என்பதும் ரணிலின் தந்திரம்.


ஆனால் சஜித் அங்கே தந்திரத்துடன் தருணத்தை சரியாக பயன்படுத்திக் கொள்ள தவறியதே, ரணிலின் இத்தனை எழுச்சிக்கும் காரணம் என்பேன்.


"எனக்கு கண் தெரியாது உதவுங்கள்" என்று ஒருவரும் ,


"எனக்கு பார்க்க முடியாமல் போனவற்றையெல்லாம் உங்களுக்கு பார்க்கும் பாக்கியத்தை கடவுள் தந்திருக்கிறார் - நீங்கள் அதிஷ்டாசாலிகள் " என்று இன்னுமொருவரும் யாசகம் கேட்கையில் இரண்டாமவர் இலக்கை இலகுவாய் எட்டிவிடுவார்.


இங்கே முதலாமவராக சஜித்தும் ,இரணடாமவராக ரணிலும் காணப்படுகின்றார்கள், ஒரு விடயத்தை எப்படி Apply செய்கிறோம் என்பதிலேதானே ஒவ்வொருவர் வெற்றியும் தங்கியிருக்கிறது. ரணில் அதனை Apply செய்த விதம் அவரை நிறைவேற்றதிகார இருக்கையை நெருங்கும் இலக்கை இலகுபடுத்தியிருக்கிறது.


இதுவரை நடந்த தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு, சஜித் இனிமேலாவது சாதுர்ய அரசியலை கையில் எடுக்க வேண்டும், இனியும் சாதுர்யத்தை கையிலெடுக்காமல் போனால் வரலாற்றுத் தவறை இழைத்தவராகிவிடுவார்.


இப்போதிருக்கும் நிலையில் சர்வதேசத்தின் செல்லப் பிள்ளையாகவும், இப்போதிருக்கும் அரசியல், பொருளாதார நெருக்கடி நிலைமையை ஓரளவுக்கேனும்  தீர்க்கவல்ல தலைவராக ரணிலையே எல்லோரும் நோக்குகிறார்கள். நானும் அப்படித்தான் .


இந்த நேரத்தில் ரணில் ஜனாதிபதியானது சட்டவிரோதமானது என்று சிறு பிள்ளைத்தனமான அறிக்கைகள் விடுவதை விடுத்து வேலையில் இறங்கவேண்டும்.


இலங்கை அரசியல் சாசனத்தின் படி, ஜனாதிபதி பதவி வகிக்கும் ஒருவர் அந்த பதவியில் இருக்கும் தருணத்தில் மரணித்தாலோ, பதவி நீக்கப்பட்டாலோ, ஊழல் குற்றச்சாட்டுக்களுக்கு ஆளானாலோ அந்த பதவி வறிதாகும் தருணத்தில் அந்த பதவிக்கு நேரடித் தகுதியுடையவராக பிரதமர் பதவி வகிப்பவரே அந்த பதவியில் நியமிக்கப்படுவார்.


அதன்பின்னர் ஒரு மாதத்துக்குள் நாடாளுமன்றம் கூடி ஜனாதிபதி பதவிக்கான போட்டி பல்முனைகளில் நிலவுமாக இருந்தால், வாக்கெடுப்புக்கு விடப்பட்டு அதிக வாக்குகள் பெறுபவர் ஜனாதிபதியாக தேர்வாவர்.


இது சட்ட நடைமுறையாக பேசப்படுகின்றது.


இப்போது அரசியல் யாப்பின் பிரகாரம் பிரதமர் பதவி வகிப்பவரான ரணில் விக்கிரமசிங்க, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவியை  நெருங்கிவிட்டார்.


இதனை இப்போதைய நிலையில் யாராலும் தடுக்க முடியாது என்பதே எல்லோரதும் பொதுவான அபிப்பிராயமாகும். இந்தியாவும், அமெரிக்காவும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்காது என்பதை நம்பியே ஆகவேண்டும் .


வெள்ளிக்கிழமை (15) மாலை வேளை வரையில் ஜனாதிபதி பதவிக்கு ரணில் விக்கிரமசிங்க, டலஸ் அழகப்பெரும, சஜித் பிரேமதாச ஆகியோர் போட்டியிடவுள்ளதாக செய்திகள் உறுதிப்படுத்துகின்றன.


ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன -145 ஆசனங்கள்

சஜித்தின் SJB - 54 

TNA -10 

JVP - 3 


இப்படியிருக்கும் போது சஜித் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட்டு வெற்றிபெறும் வாய்ப்புக்கள் குறைவாகவே இருக்கின்றன , SLPP யுடன் கூட்டாக இணைந்து போட்டியிட்ட ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் ஒரு குழு சஜித்துக்கு ஆதரவை வழங்கினாலும்கூட, சஜித் வெற்றிபெறுவாரா என்பது கேள்விக்குரியதே.


ஆகவே தேவையற்ற போட்டி நிலையையும், சிக்கல் நிலையையும் தவிர்த்து, பிரதமர் பதவியையாவது எப்படி கைப்பற்றுவது எனும் வேலைத்திட்டத்தில் சஜித் காய்களை நகர்த்த வேண்டும்.


ஏனென்றால் சர்வகட்சி அரசமைக்க கோட்டா அழைத்த போது, அதனை பெரும் எடுப்பில் மறுத்த சஜித், மறுநாள் ரணில் பிரதமராகப்போகிறார் என்ற செய்திகள் வெளிவந்தவுடன் அவசர அவசரமாக கோட்டாவுக்கு கடிதம் அனுப்பி ஆட்சிப்பொறுப்பை ஏற்க தயார் என்று கடிதம் எழுதியதெல்லாம் சிறுபிள்ளைத்தனம்.


கோட்டா பதவி விலகினால்தான் பதவி ஏற்பேன் என்று கெத்துக் காட்டிய சஜித், அதற்கு அடுத்த நாளே ரணிலை கண்டவுடன் ஆட்சி அமைக்க தயாராகி இருக்கிறோம் என்பதெல்லாம் எனக்கு சஜித் மீது இருந்த நம்பிக்கையை இல்லாது செய்திட்ட சம்பவங்கள்.   


ஆகவே பதவி ஆசையில் ஆடுகிறார் என்று ரணிலை நாம் குற்றசாட்டிக் கொண்டிருக்காமல், அவரை அவர் பாட்டிலேயே விட்டுவிட்டு பிரதமர்  ஆசனத்தை கைப்பற்றி நாட்டை ஆள முற்படவேண்டும். 


ஒருவேளை ரணில் தன் திறமையை பயன்படுத்தி IMF பேச்சுவார்த்தைகளை வெற்றிக்கு கொண்டு சென்று, நாட்டை சுமூகமான நிலைக்கு இட்டுச் செல்வாராக இருந்தால், அதன் பெருமையும் பங்கும் சஜித்துக்கும் தானாகவே வந்து சேர்ந்துவிடும்.


மாறாக நாட்டை குழப்பும் வேலைகளில் அவர் ஈடுபடுவாராக இருந்தால், இலங்கையில் அரசியல் ஸ்திரத்தன்மை இல்லாமல் இருப்பதனால் IMF விலத்திக் கொள்கிறது என்ற அறிக்கைகள் வருகின்றபோது, அதற்கு காரணகர்த்தாவாக அங்கே சஜித் குற்றவாளியாக நோக்கப்படவும் வாய்ப்பிருக்கிறது.


இதனிடையே மஹிந்தவுக்கு சுகயீனம் வந்துவிட்டது என்ற செய்திகள் முன்னர் வெளியாகிய தருணத்திலிருந்து, பிரதமர் பதவிக்கு வருவார் என்ற பேசப்படும் டலஸ் அழகப்பெருமவுக்கு இப்போது பிரதமர்  கதிரை ஆசை வந்திருக்கிறது. அதனால்தான் மொட்டுக் கட்சியின் தீர்மானம் கடந்து, ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடப்போகிறேன் என்று அறிக்கை விட்டுக் கொண்டிருக்கிறார், இதன்முலம் அவர் பிரதமர் பதவியை கோருகிறார் என்பதும் தெளிவாகின்றது.


ஆனால் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உயர் பீடம் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்கவே முடிவெடுத்திருப்பதால் டலஸ் தோற்றுப்போவதும் உறுதியாகியுள்ளது.


ஆகவே இவை எல்லாவற்றையும் நோக்கும் போது ரணில் ஜனாதிபதியாகவும், எதிர்க் கட்சியில் இருந்து ஒருவர் பிரதமராகவும் இருப்பதே அரசியல் நெருக்கடிகளை தீர்க்கவல்ல பொறிமுறையாகும். சாத்தியப்படுமா என்பது பெருத்த கேள்வியாயினும் சாத்தியமாகாவிட்டால் சாக்கடைநோக்கி நாம் தள்ளப்படுவதை யாராலும் தடுக்கமுடியாது.


ஆகவே தருணத்தை சரியாக பயன்படுத்திக் கொண்டு ஜனாதிபதி பதவிக்கு ரணிலுக்கு ஆதரவு வழங்குகிறோம் என்று தெரிவித்து, பிரதமர் பதவியை கோரி சஜித் அதை நோக்கி காயை நகர்த்துவாராக இருந்தால் சஜித் வாழ்க்கை பிரகாசமாகும்.


ஹர்ஷ டீ சில்வா, எரான் விக்ரமரத்ன போன்ற பொருளாதார வல்லுநர்களை தன் பக்கத்திலேயே வைத்திருக்கும் சஜித், பிரதம அமைச்சராகி, சில வேலைத்திட்டங்களை முன்னெடுத்து ரணிலுடன் சேர்ந்து பயணிப்பதே காலத்தின் தேவையாக உள்ளது. 


இதுவே நாட்டில் எழுந்திருக்கும் மக்கள் எழுச்சியை தவிர்க்கவும் துணை புரியும், மாறாக ரணில் ஜனாதிபதியாகவும் , மொட்டு கட்சி உறுப்பினர் ஒருவரே பிரதமராகவும் தேர்வு செய்யப்பட்டால் நாட்டில் அமைதியை பேணமுடியாது போகும் என்பது நிதர்சனமான உண்மை .


இனவாத அரசியலை வெறுத்து ஒதுக்கும் பேரினவாத மக்களது சிந்தனை மாற்றத்தை காரணியாக கொண்டு, வகைதொகையின்றி  தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை, தமிழர் நிலங்கள் விடுவிப்பு, மலையக தோட்ட தொழிலாளர் பிரச்சனைக்கு தீர்வு என்று தடாலடி நடவடிக்கைகளில் சஜித் இறங்குவாராக இருந்தால் அவரது எதிர்காலம் வேறு ஒருகோணத்தில்  பயணப்படும்.


இல்லையென்றால் இப்படியே இவர் முட்டுக்கட்டை அரசியல் புரியும் தருணத்தில், ரணில் தன் நரி மூளையை பயன்படுத்தி SJB யை சிதைத்து அங்கிருந்து சஜித்துக்கு போட்டியாக பொன்சேகாவையும், சம்பிக்க ரணவக்கவையும் மாற்று தலைவர்களாக்கி விடும் முயற்சிகளில் இறங்குவாராக இருந்தால், சஜித் நிலைமை என்னவாகும் என்பதை சிந்தித்து பாருங்கள்.


ஆகவே, மைக்கை கொடுத்தால் வாய்க்குள் விழுங்கி கொள்ளும் அவரது அருகில் இருக்கும் வெத்துவேட்டுக்களின் முட்டாள்தன சிந்தனைகள் கடந்து, கொஞ்சம் புத்திசாலிதனமாக சஜித் காய்களை நகர்த்தும் போது எதிர்காலத்துக்கான தலைவராக தோற்றம் பெறுவார்.


ரணில் விக்கிரமசிங்க - வயது 73 

சஜித் பிரேமதாச- வயது- 55  


ஏன் இங்கே வயதைக் குறிப்பிடுகிறேன் என்பதை வெளிப்படையாக உங்களுக்கு புரிய வைக்க வேண்டிய தேவையில்லை.


ராஜபக்ச சாம்ராஜ்யமும்  இல்லாது ஒழிக்கப்பட்டிருக்கும் நிலையில், அடுத்த 10 ஆண்டுகளில் சஜித் ஒரு பெரும்தலைவனாய் மிளிரும் வாய்ப்புக்கள் உருவாக்கலாம் +உருவாகலாம் . சஜித் போட்டியாக வேறு தலைவர்ரகள் உருவாவதை தடுத்து , தவிர்த்து இலகுவாய் இலக்கை எட்டலாம்.


வாய்ப்பு அடிக்கடி வாசல் கதவுகளை தட்டுவதில்லை- சஜித்  விழித்தெழுவாரா என்று காத்திருப்போம்.


12 மே 2022

முட்டாள்களின் தீவு

 


இந்தக் கேள்விதான் நாடு முழுக்க இப்போது பேசுபொருள். பிரதமர் தெரிவில், உள்ளூர் அரசியல் காய்நகர்த்தல்கள் மட்டுமல்ல, வெளிச் சக்திகளின் புவிசார் அரசியல் நிகழ்ச்சிநிரலும் (Geopolitical Agenda) உள்ளது.


புதிய பிரதமர் தெரிவும் புதிய அமைச்சரவை நியமனமும், ஒரு வார காலத்திற்குள் நடந்தேறும் என, ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் தெரிவித்துள்ளார்.


நேற்றிரவே முன்னாள் பிரதமர் ரணிலோடு ஜனாதிபதி பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார். அரசியல் அரங்கில் பிரதமர் பதவிக்காக அடிபட்ட, முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரியவின் பெயர் இப்போது பின்தள்ளப்பட்டு விட்டது.


பிரதான எதிர்க் கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து (SJB) விலகி, சுயாதீனமாக செயற்படப் போவதாக ஹரீன் பெர்னாண்டோ நேற்றிரவு அறிவித்திருக்கிறார். மனுஷ நாணயக்கார, ஹர்ஷ டி சில்வா உள்ளிட்ட பலர் ஹரீனுடன் அணி சேர்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.


இந்தப் பிளவு அரசியல் வட்டாரங்களில் முன்னரே அனுமானிக்கப்பட்ட ஒன்றுதான். புதிய ஜனாதிபதியாக கலாநிதி ஹர்ஷ டி சில்வாவை (கவனிக்க: சஜித்தை அல்ல), ஹரீன் பாராளுமன்றத்தில் பரிந்துரை செய்ததையும், அப்போதே லக்ஷ்மன் கிரியெல்ல அதை மறுத்ததையும் இங்கு சுட்டிக் காட்டலாம். மேதினத்தில் ஹரீனுக்கும் பொன்சேகாவுக்குமிடையே நடந்த வாக்குவாதத்தையும் இந்தப் பின்னணியில் புரிந்து கொள்ள முடியும்.


ராஜபக்சக்களுக்கு மிகவும் தோதான ஒரு தெரிவு ரணில்தான். அத்தோடு பிராந்திய - சர்வதேச கூட்டணிக்கும்  பன்னாட்டு நிறுவனங்களுக்கும் ரணில் மிகவும் ஏற்புடையவர்.


இவ்வாறான அரசியல் அணிச் சேர்க்கைகள், புவிசார் அரசியல் நிகழ்ச்சி நிரலுடன் தொடர்புபட்டிருப்பதை ஊகிப்பதொன்றும் அவ்வளவு கடினமானதல்ல.


ஐந்து முறை பிரதமராக இருந்த ரணிலுக்கு, இந்த நெருக்கடி நிலமையைக் 'கையாளக் கூடிய' (கவனிக்க: 'தீர்க்கக் கூடிய' என்று சொல்லவில்லை) திறமையும் நீண்ட அனுபவமும் உள்ளது என்தில் சந்தேகம் இல்லை.


ஆனால், இந்த மக்கள் போராட்டத்தின் அபிலாசைகளை திசைதிருப்பும் 'டீல்' அரசியலில், அவரது வகிபாகம் எப்படி இருக்கப் போகிறது என்பது தெரிந்ததுதான். இன்னும் சில வாரங்களில் அது இன்னும் தெளிவாகத் தெரிந்து விடும். ராஜபக்சக்களுக்கு வசதியானதும் பாதுகாப்பானதுமான ஒரு வெளிச்செல்லும் உத்தியை (Exit Strategy) அவர் ஏற்படுத்திக் கொடுப்பார் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.


இந்தியா மற்றும் மேற்கு முகாமினதும் பன்னாட்டு நிறுவனங்களினதும் நிதியுதவியை வென்றெடுப்பதில் ரணில் வெற்றிபெறுவார் என்பதிலும் சந்தேகமில்லை. 


ஒரு வகையில் ரணில் அவசியமானவர். இன்னொரு வகையில் ஆபத்தானவர். இதன் பரிமாணம் பற்றிய  ஒவ்வொருவரின் புரிதல் அளவும் வேறுபட்டது. இந்த 'ஆபத்தான அவசியத்தை' இடைக்காலத் தீர்வாகக் கையாளலாம் என்று ராஜபக்சக்களும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சக்திகளும் எண்ணுகின்றன. 


இந்த அரசியல் சுழியில் அடிபட்டுப் போகப் போவது சஜித்தான். எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பை சரியாகச் செய்ய இயலாத தடுமாற்றமும், நெருக்கடி காலகட்டத்திற்கு தலைமை வழங்க முடியாத அவரது இயலாமையும், அவரது அரசியல் முக்கியத்துவத்தை நீர்த்துப் போகச் செய்திருக்கின்றன.


செயல்வேகம் குன்றிய, உயர் பதவிக்கு அவசியமான அறிவாளுமைப் போதாமையுடைய அவரை, பிரேமதாஸவின் மகன் என்பதற்காக மட்டும் நாட்டு மக்கள் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. அநேகமாக, அடுத்த தேர்தலில் சஜித் மிகவும் பலவீனப்பட்டு நிற்பார். ஐக்கிய மக்கள் சக்தியும் பலவீனமடைந்து விடும்.


இது ஒரு புறம் மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியைப் பலமடையச் செய்யும். மறுபுறம், ஆட்டம் கண்டிருக்கும் பொதுஜன பெரமுனவின் வாக்கு வங்கியை, சுதந்திரக் கட்சி குறி வைத்து இயங்கும். இது அதிகார சமநிலையில் மாற்றங்களை ஏற்படுத்தும்.


இந்தப் புதிய அரசியல் நகர்வுகளால், தற்போது நலிவடைந்து பின்தள்ளப்பட்டிருக்கும் பிரதான கட்சிகளான ஐ.தே.க மற்றும் சுதந்திரக் கட்சி ஆகியன ஒப்பீட்டளவில் முன்னரங்குக்கு வரும் சாத்தியங்கள் அதிகம். அதனால்தான் சந்திரிக்கா தரப்பும் களமாடுகிறது.


இதேவேளை, சம்பிக்க ரணவக்கவும் அவரது 43 ஆவது படையணியும் சஜித் அணியிலிருந்து ஒதுங்கி, தற்போது அடிபட்டு நிற்கும் சிங்களத் தேசியவாதத்தின் மீட்பராக தம்மை முன்னிறுத்தி இயங்குகின்றனர். அடுத்த பிரதமருக்கான போட்டிக் களத்தில் சம்பிக்கவும் தலைகாட்டிக் கொண்டிருக்கிறார். ஆனால், இது நாட்டுக்கு மிக ஆபத்தான முன்னெடுப்பு.


இது இவ்வாறிருக்க, பிரதான கட்சிகள் மீதான அதிருப்தி அலையொன்று நாட்டில் பலமாக உருவெடுத்திருக்கிறது. சீரியஸான மாற்றத்தையே இது வேண்டி நிற்கிறது. இதன் பலனை அனுர தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அறுவடை செய்யும் வாய்ப்புகளே அதிகம். அதற்கு தேசிய மக்கள் சக்தியின் அரசியல் நகர்வு இன்னும் விரிவும் வீரியமும் பெற வேண்டும். 


எது எப்படிப் போனாலும்,திசைகாட்டி முன்னெப்போதை விடவும் பெருமளவு ஆசனங்களை வெல்லும் என்று எதிர்பார்க்கலாம். அந்த வகையில், புதிய பாராளுமன்றத்தில் அதுவும் ஒரு தீர்மானகரமான சக்தியாக இருக்கும். 


எது எப்படியோ, அடுத்து வரும் ஆறு மாதங்களுக்கு அல்லது ஒரு வருடத்திற்குப் பின்னர், பொதுத் தேர்தலொன்று இடம்பெறும் சாத்தியம் மிக அதிகளவில் உள்ளது. இப்போதுள்ள அரசியல் ஸ்திரமின்மையில் இருந்து வெளியேற அதுவே பொருத்தமான தீர்வாகும்.


புதிய பிரதமர் தெரிவு, அடுத்த தேர்தலை மையமாகக் கொண்ட ஒரு நகர்வு என்பதை, அரசியல் நடப்புகளை நன்கு ஊன்றிக் கவனித்தால் புரிந்து கொள்ளலாம்.


அதனால்தான் புதிய பிரதமராவதற்குத் தயார் என்று ஏகப்பட்ட ஆட்கள் அறிவிப்புச் செய்து கொண்டிருக்கிறார்கள்.


பலமுனைகளில் துண்டு துண்டாக உடைந்து நிற்கும் அரசியல் தரப்புகளை, தேர்தலின் பின்னர் அணி சேர்க்கும் வேலையை பிராந்திய மற்றும் புவிசார் அரசியல் சக்திகள் செய்யும்.


இலங்கை விவகாரத்தில் ஒப்பீட்டளவில் சீனாவின் செல்வாக்கு குறைந்து, இந்தியாவின் கை ஓங்கியிருக்கிறது என்பது பகிரங்க ரகசியம். தற்போதைய பொருளாதார நெருக்கடி இந்தியாவுக்குக் கிடைத்த பொன்முட்டையாக ஆகியிருக்கிறது.


இந்த நகர்வுகள் இடைக்காலத் தீர்வாகவே வருகின்றன. அதேவேளை, இவை இறுதித் தீர்வில் தாக்கம் செலுத்த வல்லன.


மக்கள் போராட்டத்தைத் திசைதிருப்பவும், தமக்கு வாய்ப்பாக வளைத்தெடுக்கவும் பல்வேறு சக்திகள் களமிறங்கியுள்ளதைக் காண முடிகிறது.  

எந்த சக்தி வந்து எந்த ஆட்டத்தைப் போட்டாவும், நாம்தான் விழிப்பாக இருக்க வேண்டும். ஏமாறக் கூடாது.


இந்த நாட்டுக்கு ஒரு தீர்க்கமான மாற்றம் தேவை. அது அடிப்படையான முறைமை மாற்றம் (System Change) என்பதில் மக்களாகிய நாம்தான் கவனமாக இருக்க வேண்டும்.


கடந்த காலத்திலிருந்து நாம் பாடம் படிக்கத் தயாரென்றால்தான், நமது தலைவிதியை மாற்ற முடியும். இல்லாவிட்டால் 'பழைய குருடி கதவைத் திறடி' கதைதான் தொடரும்.


தலைப்புச் செய்திகளை மட்டும் பார்த்து விட்டு நகரப் போகிறோமா? அல்லது நமது எதிர்காலத்தை ஆக்கபூர்வமாக வடிவமைக்கப் போகிறோமா?


28 ஏப்ரல் 2022

அபி பரிப்பு கேவா



2019 ஆம் ஆண்டு நவம்பர் ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்ச ஈட்டிய அமோக வெற்றி சுதந்திரத்தின் பின்னர் இலங்கையில் ஏற்பட்ட மூன்றாவது சிங்கள பௌத்த எழுச்சி என்றும், முன்னெப்பொழுதும் இருந்திராத பேரெழுச்சி என்றும் வர்ணிக்கப்பட்டது (முதலாவது, இரண்டாவது எழுச்சிகள் முறையே 1956 இலும், 2010 இலும் இடம்பெற்றிருந்தன). இலங்கை இன்று எதிர்கொண்டு வரும் பெரும் நெருக்கடிக்கான விதைகள் அந்த வெற்றியை அடுத்தே ஊன்றப்பட்டன. குறிப்பாக விமல் வீரவன்ச, உதய கம்மன்பில போன்றவர்களை பிரதிநிதித்துவம் செய்யும் சிங்கள இனவாதிகள், அத்துரலியே ரத்ன தேரர் போன்றவர்களை பிரதிநிதித்துவம் செய்யும் காவி உடைத் துறவிகளின் ஒரு குழுவினர், வியத்மக அறிஞர் குழாம் மற்றும் சிங்கள செய்தி ஊடகங்கள் ஆகிய நான்கு தரப்புக்கள் கட்டமைத்த போலித் தேசியவாத பெருமிதவுணர்வுடன் இணைந்த விதத்தில் முன்னெடுக்கப்பட்ட இனவெறி மற்றும் மதவெறிப் பிரச்சாரங்களின் மறைமுக மற்றும் நேரடி விளைவொன்றாகவே இன்றைய நெருக்கடி தோன்றியிருக்கின்றது.


சிங்கள - பௌத்த மக்களின் நலன்களை பேணுவது எப்படி என்ற  விடயத்தை இந்தத் தரப்பினர் முற்றிலும் பிழையாக புரிந்து கொண்டதே இங்குள்ள பிரச்சினை. சிறுபான்மை சமூகங்களின் உரிமைகளைப் பறிப்பதன் மூலமும், அவர்களுடைய மத உணர்வுகளை புண்படுத்துவதன் மூலமும், பல ஆண்டு காலம் அச்சமூகங்;கள் அனுபவித்து வந்திருக்கும் தனித்துவமான கலாசார உரிமைகளை மறுப்பதன் மூலமும், பௌத்த மக்கள் எவரும் வாழாத முல்லைத்தீவு மற்றும் பாலமுனை போன்ற இடங்களில் புத்தர் சிலைகளைக் கொண்டு போய் வைப்பதன் மூலமும், கிழக்குக்கான தொல்லியல் செயலணி என்ற போர்வையில் தமிழ், முஸ்லிம் மக்களின் காணிகளை அடாவடித்தனமாக அபகரிப்பதன் மூலமும் சிங்கள மக்களின் நலன்களை நிறைவேற்றி வைக்க முடியும் என இவர்கள் தவறாகப் புரிந்து கொண்டிருந்தார்கள். அதற்கு ஊடாக அவர்கள் இலங்கைச் சமூகத்தை பெரும்பான்மை – சிறுபான்மை என இரு பிரிவுகளாக பிளவுபடுத்தினார்கள். 


இந்த இனவாதக் கோ~ங்களின் பேரோசையும், சிங்கள பௌத்த பெரஹராவின் மெய் சிலிர்க்க வைக்கும் காட்சிகளும் சாதாரண சிங்கள மக்களின் காதுகளையும், கண்களையும் அடைக்கச் செய்திருந்தன. இந்தக் களேபரத்தில் இலங்கைத் தீவு சர்வதேச ரீதியில் படிப்படியாக தனிமைப்படுத்தப்பட்டு வருவதனையும், அது மிக வேகமாக தனது நண்பர்களை இழந்து வருவதனையும் எவராலும் பார்க்க முடியவில்லை. 


இந்த வெற்றுக் கூச்சல்கள் இதுவரையில் தமக்கு அழிவைத் தவிர வேறு எதனையும் பெற்றுத் தரவில்லை என்பதனை சிங்கள மக்கள் சற்றுத் தாமதமாக இப்பொழுது புரிந்து கொண்டிருக்கிறார்கள். அந்தப் புரிதலை பெற்றுக்கொள்வதற்காக அவர்கள் செலுத்தியிருக்கும் விலை தான் இன்றைய இலங்கையின் நெருக்கடி. 


சுதந்திரத்திற்குப் பிற்பட்ட வரலாற்றில் முதல் தடவையாக இனவாதத்தையும், மதவாதத்தையும் நிராகரிக்கும் விதத்திலான ஒரு சிந்தனை மாற்றம் பரந்த சிங்கள சமூகத்தில் மெதுவாக, ஆனால் உறுதியாக நிகழ்ந்து வரும்; ஒரு பின்புலத்தில், இலங்கையின் இன்றைய நெருக்கடியை அலசுகிறது இக்கட்டுரை.


ஏப்ரல் மாதம் சிங்கள மக்களை பொறுத்தவரையில் குதூகலமும், கொண்டாட்டங்களும் நிறைந்த ஒரு மாதம். நெல் அறுவடைக்கு பின்னர் சாதாரண மக்களின் கைகளில் காசு புழங்கும் காலம். தமது பாரம்பரிய புத்தாண்டு பண்டிகையை கொண்டாடுவதற்கு அவர்கள் வித விதமான உணவுப் பண்டங்களையும், உடு துணிகளையும், பரிசுப் பொருட்களையும், வீட்டுக்குத் தேவையான தளபாடச் சாமான்களையும் வாங்குவது வருடாந்த வழமை. அந்தக் கொள்முதல்களுக்கென தமது ஆண்டு வருமானத்தில் சுமார் கால்வாசிப் பகுதியை இந்த மாதத்தில் அவர்கள் செலவிடுவார்கள்.


ஆனால், இந்தத் தடவை எல்லாமே தலைகீழ். கொண்டாட்டங்களின் பூமியாக மாற வேண்டிய சிங்களப் பெருநிலம் கொந்தளிப்புக்களின் பூமியாக மாறியிருக்கின்றது. விலைவாசிகளில் பன்மடங்காக ஏற்பட்டிருக்கும் உயர்வு, அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாடு என்பவற்றுடன் இணைந்த விதத்தில் பதுக்கல் வியாபாரம் மற்றும் கறுப்புச் சந்தை என்பன நாட்டில் மீண்டும் தலைதூக்கியுள்ளன. 1970 களின் பின்னர் பிறந்த தலைமுறையினர் தமது வாழ்நாளில் முதல் தடவையாக இத்தகையதொரு பொருளாதார நெருக்கடியைச் சந்திக்கிறார்கள்.


இந்த நிலையில் மக்களின் ஆவேசமும், விரக்தியும் தன்னியல்பாக வெளியேறிக் கொண்டிருக்கின்றன. பொதுவாக சிங்கள பேச்சு வழக்கில் பயன்படுத்தப்படும் இரு சொற்களை அவர்கள் அதிகம் அதிகம் இப்பொழுது உச்சரித்து வருவதைப் பார்க்க முடிகிறது. ஒன்று ‘பரிப்புவக் கேவா’ என்பது (‘பருப்பு கணவா’ என்ற சிங்களச் சொலவடை ‘நம்பி மோசம் போனோம்’ என்ற அர்த்தத்தில் பயன்படுத்தப்படுகிறது. ‘நாங்களாகவே தேடிக் கொண்ட கேடு’ என்றும் சொல்லலாம்). அதே நேரத்தில், ராஜபக்~ அரசாங்கத்தை வசைபாடுவதற்கு மட்டுமன்றி முன்சொன்ன நான்கு தரப்புக்களை சபிப்பதற்கும் அவர்கள் ‘காலகண்ணி’ என்ற சொல்லை பயன்படுத்துகின்றார்கள் (‘காலகண்ணி’ என்ற சொல்லுக்கு தமிழில் ‘படு பாவிகள்’ என்ற விதத்தில் பொருள் கொள்ளலாம்). 


இங்குள்ள விசே~ம் தமிழர்களும், முஸ்லிம்களும் ஏற்கனவே ‘தின்றிருக்கும் பருப்பை’ இப்பொழுது சிங்கள மக்கள் தின்றிருக்கிறார்கள் என்பதுதான். அதாவது, தேர்தல்களில் வாக்குகளை அள்ளிக் கொள்வதற்காக இனவாதத்தை தூண்டி, மக்களை உசுப்பேற்றி முன்னெடுக்கப்படும் சந்தர்ப்பவாத அரசியல் இறுதியில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் அழிவை மட்டுமே எடுத்து வர முடியும் என்ற கசப்பான பாடத்தை ஏற்கனவே தமிழர்களும், முஸ்லிம்களும் படித்திருக்கின்றார்கள். இப்பொழுது சிங்களவர்களின் முறை வந்திருக்கின்றது. 


இன்று நாடெங்கிலும் பரவலாக இடம்பெற்று வரும் அரச எதிர்ப்பு  ஆர்ப்பாட்டங்களின் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய ஒரு சிறப்பம்சம் அவை முழுக்க முழுக்க சிங்கள மக்களால் முன்னெடுக்கப்பட்டு வருவதாகும். இனவாதிகளும், சிங்கள ஊடகங்களும் உருவாக்கிய சமூகப் பிளவின் (Ehtnic Polaristion)  ஒரு பிரதிபலிப்பாகவே இதனைப் பார்க்க முடிகிறது. இந்தப் பொருளாதார நெருக்கடி இன மத பேதமில்லாமல் எல்லோரையும் மிகவும் மோசமான விதத்தில் பாதித்திருந்த போதிலும்,  தமிழ் பேசும் மக்கள் செறிந்து வாழும் வடக்கு கிழக்கு பிரதேசங்களிலோ அல்லது பெருந்தோட்டப் பிரதேசங்களிலோ குறிப்பிடத்தக்க அளவிலான அரச எதிர்ப்பு செயற்பாடுகள் இடம்பெறுவதாகத் தெரியவில்லை.


‘இது அவர்கள் வலிந்து தேடிக்கொண்ட ஒரு நெருக்கடி. அதனால் அவர்களே இதனை தீர்த்துக் கொள்ளட்டும்’ என்ற விதத்திலான ஒரு அலட்சிய மனப்பாங்கு சிறுபான்மை மக்களுக்கு மத்தியில் நிலவி வருவது போல் தெரிகிறது. 


‘இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களிலோ அல்லது அரச எதிர்ப்பு செயற்பாடுகளிலோ பங்கேற்பதை முஸ்லிம்கள் முற்றாக தவிர்த்துக் கொள்ள வேண்டும்’ என்ற விதத்தில் ஒரு சில முஸ்லிம் அமைப்புக்கள் விடுத்திருக்கும் வேண்டுகோள் மற்றொரு சுவாரசியம். அத்தகைய ஒரு வேண்டுகோள் தேசிய நீரோட்டத்திலிருந்து தம்மை அன்னியப்படுத்தக்கூடியதாக இருந்து வந்த போதிலும், இந்த அரச எதிர்ப்பு அலைகள் எந்த ஒரு நேரத்திலும் தமக்கு எதிராக திருப்பி விடப்பட முடியும் என்ற அச்சம் காரணமாக முஸ்லிம்கள் அப்படியான ஒரு அணுகுமுறையை எடுத்திருக்க முடியும். 


சிங்கள மக்களின் எழுச்சி இடம்பெற்றிருப்பதாக கூறப்பட்ட ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஓர் எதிரியை உருவாக்க வேண்டிய தேவை ஏற்பட்டிருந்தது. சுதந்திரத்திற்கு பின்னர் முதலாவது சிங்கள – பௌத்த எழுச்சி 1956 இல் ஏற்பட்டது. தமிழர்களை இலக்கு வைத்து நிகழ்த்தப்பட்ட மிகக் கொடூரமான வன்முறைச் சம்பவங்களுக்கு ஊடாக அந்த எழுச்சி ‘தமிழர்களுக்கு எதிரானது’ என்ற தோற்றத்தை உருவாக்கினார்கள் சிங்கள இனவாதிகள். யாழ்ப்பாணத்தில் 1958 இல் வாகன இலக்கத் தகடுகளில் தமிழ் ‘ஸ்ரீ’ எழுத்து பொறிக்கப்பட்ட பொழுது மீண்டும் ஒரு கலவரத்தை ஏற்படுத்தி 1956 இன் அரசியல் மாற்றம் சிங்கள மொழியின் எழுச்சியின் ஒரு குறியீடு என்பதையும், அங்கு தமிழ்மொழிக்கு இடமில்லை என்பதையும் அவர்கள் எடுத்துக் காட்டினார்கள். 


2010 இல் போர் முடிவை அடுத்து மகிந்த ராஜபக்ச ஜனாதிபதித் தேர்தலில் ஈட்டிய வெற்றியை சிங்கள – பௌத்த மக்களின் இரண்டாவது எழுச்சி என்று சொன்னார்கள் அவர்கள். அந்தச் சந்தர்ப்பத்திலும் விடுதலைப் புலிகள் இயக்கம் நேரடி எதிரியாகவும், அவர்கள் பிரதிநிதித்துவம் செய்த தமிழ்ச் சமூகம் மறைமுக எதிரியாகவும் சித்தரித்துக் காட்டப்பட்டது. 


2019 ஜனாதிபதித் தேர்தல் இந்தப் போக்கின் உச்ச கட்டமாக இருந்தது. கோத்தாபய ராஜபக்ச தரப்பில் முன்னெடுக்கப்பட்ட பிரச்சாரங்களில் ‘இஸ்லாமிய தீவிரவாதம்’ சிங்கள மக்களின் நேரடி எதிரியாகவும், இலங்கை முஸ்லிம் சமூகம் மறைமுக எதிரியாகவும் கட்டமைக்கப்பட்டிருந்தது.


‘சிங்கள மக்களின் நலன்கள்’ என்ற தலைப்பு இலங்கையில் 2010 இன் பின்னரேயே பகிரங்க உரையாடலுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருந்தது. எதனை பொது வெளியில் பேசுவது, எதனை தனிப்பட்ட உரையாடல்களின் போது பேசுவது என்ற சூட்சுமத்தை அறிந்திராத ஒரு சில சிறுபான்மை அரசியல் கட்சித் தலைவர்கள் தொடர்ந்து முன்வைத்து வந்த ‘இலங்கையில் சிறுபான்மைச் சமூகங்களின் ஆதரவு இல்லாமல் எவரும் அரச தலைவராக வர முடியாது; யாரும் அரசாங்கம் அமைக்க முடியாது’ என்ற வாதம் இறுதியில் சிறுபான்மைச் சமூகங்களுக்கே வினையாக வந்து முடிந்தது. 2010 ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் அந்த வாதத்தை பொய்யாக்கின. 


அந்த திருப்புமுனை நிகழ்வு 2010 இன் பின்னர் இலங்கை அரசியலில் பெரும்பான்மை – சிறுபான்மை இயங்கியலை வடிவமைப்பதில் பெரும் செல்வாக்குச் செலுத்தியது. மகிந்த ராஜபக்சவின் சிங்கள – பௌத்த அரசியல் செயல்திட்டத்தை சித்தாந்த ரீதியில் வடிவமைத்துக் கொடுத்த நளின் டி சில்வா, குணதாச அமரசேகர, கெவிந்து குமாரதுங்க போன்ற  தேசியவாதிகள் சிங்கள மக்களின் இந்த எழுச்சித் தருணத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென தொடர்ந்தும் பரப்புரை செய்து வந்தார்கள். ‘சிறுபான்மை கட்சிகள் இனிமேலும் சிங்கள மக்களை பணயக் கைதிகளாக எடுத்து, காரியம் சாதித்துக் கொள்வதற்கு இடமளிக்க முடியாது’ என்ற கருத்தை வலியுறுத்தும் விதத்தில் நளின் டி சில்வா தொடர்ந்து எழுதி வந்தார். அரசியல் மேடைகளை பயன்படுத்தி அந்தக் கருத்தை சாதாரண சிங்கள மக்கள் மத்தியில் எடுத்துச் சென்றார்கள் விமல் வீரவன்ச, உதய கம்மன்பில மற்றும் அத்துரலியே ரத்ன தேரர் போன்ற தரப்பினர். அந்த எண்ணத்தை மக்கள் மனதில் வேரூன்றச் செய்வதற்கு பாட்டலி சம்பிக்க ரணவக்க போன்றவர்களும் கணிசமான ஒரு பங்களிப்பை வழங்கியிருந்தார்கள் என்பதனை இங்கு ஒரு மேலதிக தகவலாக குறிப்பிட வேண்டும்.


2010 – 2015 மகிந்த ராஜபக்ச அரசாங்கம் சுதந்திரத்திற்கு பின்னர் இலங்கையில் ஆட்சிக்கு வந்த ஊழல்களும், முறைகேடுகளும் மலிந்த ஒரு அரசாங்கமாக இருந்து வந்த போதிலும், அதை சிங்கள தேசியவாதிகள் கண்டும் காணாமலும் இருந்தார்கள். அதற்கு அவர்கள் வெளியில் சொல்லாத காரணம் ‘அப்படியான கடுமையான ஒரு விமர்சனம் சிங்கள – பௌத்த அரசியல் செயல்திட்டத்தை பலவீனப்படுத்த முடியும்’ என்பது. 


‘ஒரு மாபெரும் நீரோட்டம் சேற்றையும், சகதியையும் அள்ளிச் செல்வது சகஜம்’ என்று சொல்லி, அதனை எளிதில் கடந்து சென்றார் நளின் டி சில்வா. ஆனால், இன்றைய நெருக்கடியை அப்படிக் கடந்து செல்ல முடியாது என்பதனை அவர்கள் நன்கு அறிந்துள்ளார்கள்.


சிங்கள மக்களின் ஆவேசத்தைப் பார்த்து இனவாதிகளும், தேசிய வாதிகளும் கதி கலங்கி நிற்கிறார்கள். தமது குற்ற உணர்ச்சியை மறைத்துக் கொள்வதற்காக எதிர்க் கட்சியுடன் சேர்ந்து இவர்களும் ராஜபக்சகளை வசை பாடிக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால், இன்றைய இலங்கையின் நெருக்கடியை தீவிரப்படுத்திய பல பிழையான முடிவுகளை எடுப்பதற்கு ஜனாதிபதியை தூண்டியவர்கள், அவர் மீது அழுத்தம் பிரயோகித்தவர்கள் இதே ஆட்கள் தான்.   


கோத்தாபய ராஜபக்சவின் சிங்கள – பௌத்த அரசு எந்ததெந்தக் காரியங்களை செய்யக்கூடாது என்றும், ஒரு போதும் செய்ய மாட்டாது என்றும் இவர்கள் உரத்துச் சொல்லி வந்தார்களோ, இப்பொழுது அந்தக் காரியங்கள் அனைத்தையும் ஒவ்வொன்றாக செய்ய வேண்டிய நிலைக்கு இலங்கை அரசு பலவீனமடைந்திருக்கிறது. இந்தியா, சீனா, அமெரிக்கா போன்ற நாடுகளிடம் மண்டியிட வேண்டிய துர்ப்பாக்கியம்;; சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி போன்ற பன்னாட்டு நிதி நிறுவனங்களிடம் மன்றாடி, உதவிகளை யாசிக்க வேண்டிய நிர்ப்பந்தம்;; சிங்கள மக்களின் பொதுப் புத்தியில் ‘பிச்சைக்கார நாடு’ என்று முத்திரை குத்தப்பட்டிருக்கும் பங்களாதே~pன் கதவுகளைத் தட்டி, கடன் கேட்டு நிற்கும் சிறுமை;; மத்திய கிழக்கு நாடுகளுடனான நட்புறவுகளை புதுப்பித்து, பலப்படுத்திக் கொள்வதற்கென ராஜதந்திர ரீதியிலான இரகசிய நகர்வுகள்;; ‘ஏகாதிபத்தியவாதத்தின் அடிவருடி’ என இவர்களால் வர்ணிக்கப்பட்டு வந்த ரணில் விக்கிரமசிங்கவிற்கு வெற்றிலை வைத்து அழைத்து, பொருளாதாரத்தை மீட்டெழுப்பதற்கு யோசனை கேட்க வேண்டிய அளவுக்கு வாசல் வரையில் வந்திருக்கும் வெள்ளம்.


நாட்டை இந்த நிலைக்கு தள்ளி விடுவதற்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் பங்களிப்புச் செய்த வீரவன்ச – கம்மன்பில சோடியையும் உள்ளடக்கிய பலர் இப்பொழுது திடீரென நேரெதிர் திசையில் நின்று, ‘ராஜபக்சகளை ஒழித்துக் கட்டுவோம்’ என தொண்டை கிழியக் கத்துவது தான் வரலாற்றின் மாபெரும் முரண்நகை. 


சிங்கள செய்தி ஊடகங்களைப் பற்றி சொல்லவே வேண்டாம். சரிந்து வரும் ‘Ratings’ களை உயர்த்திக் கொள்ளும் ஒரே நோக்கத்திற்காக ‘தெரண’ மற்றும் ‘ஹிரு’ போன்ற ஊடகங்கள் ஒரு போலி அரச எதிர்;ப்பு நாடகத்தை அரங்கேற்றி வருகின்றன. 


1987 ஏப்ரல் - மே காலப் பிரிவில் ஜே ஆர் ஜயவர்தன ஆட்சிக் காலத்தில் இலங்கை அரசு எந்த அளவுக்கு பலவீனமடைந்திருந்ததோ அதே அளவுக்கு இப்பொழுதும் பலவீனமடைந்திருக்கிறது. இதற்கு அபரிமிதமான அதிகாரங்களுடன் கூடிய நிறைவேற்று ஜனாதிபதி ஆட்சி முறையும் ஒரு காரணம். 1978 இல் நிறைவேற்று ஜனாதிபதியாக முடி சூடிக்கொண்ட ஜே ஆர் ஜயவர்தன, ஒரு ஆணைப் பெண்ணாக மாற்றுவதை தவிர, தன்னால் எந்தவொரு காரியத்தையும் செய்ய முடியுமென ஆணவத்துடன் சொன்னார். 

1983 கலவரங்களில் பல நூற்றுக்கணக்கான தமிழர்கள் கொல்லப்படும் வரையில், கோடிக்கணக்கான ரூபா பெறுமதியான சொத்துக்கள் சூறையாடி அழிக்கப்படும் வரையில் வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார் அவர். யூலை 24 ஆந் திகதி மாலை பொரல்லையில் தோன்றிய கலவரம், அதன் உச்ச கட்டத்தை அடைந்திருந்த நிலையில் 28 ஆந் திகதி அரச தொலைக்காட்சியில் தோன்றி எவ்விதமான குற்ற உணர்ச்சியும் இல்லாத தொனியில் இனவாதிகளுக்கு மேலும் தூபமிடும் விதத்தில் அவர் நிகழ்த்திய உரை, இலங்கை ஜனநாயகத்தின் மீது படிந்த ஒரு பெரும் கறை. அந்த ஆணவமே அடுத்து வந்த சில ஆண்டுகளில் இலங்கை ஆசியாவின் மிகப் பெரும் கொலைக் களமாக மாறுவதற்கு வழிகோலியிருந்தது. 


1983 கலவரத்தை அடுத்து ஜே ஆர் தூரநோக்கற்ற விதத்தில் ஜே வி பி இயக்கத்தை தடை செய்வதுடன் இணைந்த விதத்தில், அக்கட்சியின் தலைவர்கள் மீண்டும் ஒரு முறை தலைமறைவாகின்றார்கள். அதனையடுத்து 1987 – 1989 கால கட்டத்தில் நாட்டில் ஓடிய இரத்த ஆறு வரலாற்றின் மற்றொரு ஆறாத வடு. அதற்கு வழிகோலியவர் அதிகார மமதையில் தன்னிச்சையாக முடிவுகளை எடுத்த ஜே ஆர் ஜயவர்தன. 


இலங்கை அரசு பலவீனமாக இருந்த அந்தத் தருணத்தை பயன்படுத்திய ராஜீவ் காந்தி ஜே ஆரை மிரட்டி, அடிபணிய வைத்தார். 1987 ஆம் ஆண்டு ஜுன் 4 ஆம் திகதி இந்திய விமானப்படையை சேர்ந்த ஐந்து விமானங்கள் இலங்கையின் வான் பரப்பில் அத்துமீறிப் பிரவேசித்து, யாழ் தீபகற்பத்தில் 25 தொன் உணவுப் பொருட்களையும், மருந்துப் பொருட்களையும் வான்வழியாக வீசி எறிந்து, இலங்கையின் இறைமையை அவமதித்த பொழுது சர்வ வல்லமை பொருந்திய ஜே. ஆர். ஜயவர்தன அதனை வாய் மூடி பார்த்துக் கொண்டிருந்தார்.


இன்றைய இலங்கை மீண்டும் ஒரு தடவை 35 ஆண்டுகள் பின்நோக்கி 1987 க்கு சென்றிருக்கின்றது. வரலாற்றிலிருந்து பாடங்களை படிக்காதவர்களை வரலாறு மீண்டும் மீண்டும் தண்டித்துக் கொண்டே இருக்கும் என்ற கூற்றின் பிரகாரம், இலங்கையை இப்பொழுது மீண்டும் ஒரு முறை இந்தியா அடிபணிய வைத்திருக்கின்றது. அண்மையில் அது இலங்கைக்கு வழங்கிய டொலர் கடன் தொகை மற்றும் வெளியில் சொல்லப்படாத அது குறித்த நிபந்தனைகள் அனைத்தும் அதனைத் தெட்டத் தெளிவாக எடுத்துக் காட்டும் சான்றுகள்.


சுதந்திரத்திற்கு பிற்பட்ட இலங்கை வரலாற்றில் பகுத்தறிவுக்கு ஒவ்வாத இத்தகைய காரியங்களுக்கு நிறைய உதாரணங்கள் உள்ளன. ‘தமிழர்களின் விடுதலை’ என்றால் என்ன என்பதனை விடுதலைப் புலிகள் இயக்கமும் இதே விதத்தில் தப்பாக புரிந்து கொண்டிருந்தது. முஸ்லிம் மக்கள் பல நூறாண்டு காலம் வாழ்ந்து வந்த பாரம்பரிய வாழ்விடங்களிலிருந்து அவர்களை துரத்தியடிப்பதன் மூலமும், பள்ளிவாசல்களில் தொழுகையில் ஈடுபட்டிருக்கும் நூற்றுக்கணக்கான மக்களை கொன்று குவிப்பதன் மூலமும், தென்னிலங்கையில் கெப்பித்திகொல்லாவையிலும், புத்தளையிலும் வறிய சிங்கள  மக்களை இலக்கு வைத்து பேருந்துகளில் குண்டுகளை வெடிக்கச் செய்வதன் மூலமும், இத்தகைய கொடூரங்களை துணிவுடன் தட்டிக் கேட்க முன்வந்த தமது இனத்தையே சேர்ந்த புத்திஜீவிகளையும், மிதவாத அரசியல் தலைவர்களையும் ‘போட்டுத் தள்ளுவதன்’ மூலமும்; தமிழர்களுக்கு விடுதலையை பெற்றுக்கொடுக்க முடியுமென அவர்கள் நம்பினார்கள். அந்த நம்பிக்கை இறுதியில் எந்த மாதிரியான அழிவுகளை எடுத்து வந்திருந்தது என்பதனை நாங்கள் பார்த்தோம்.  தமிழ் அரசியலையும், தமிழ் சமூகத்தையும் 50 ஆண்டுகள் பின்னால் கொண்டு சென்று வைத்து விட்டு 2009 இல் களத்திலிருந்து வெளியேறினார்கள் அவர்கள். 


ஓர் அரச தலைவர் காழ்ப்புணர்ச்சியுடனும், வக்கிர புத்தியுடனும் செயல்பட்டால், தனது அதிகாரங்களை து~;பிரயோகம் செய்தால் அது எத்தகைய விளைவுகளை எடுத்து வர முடியும் என்ற கசப்பான பாடத்தை கோட்டாபய ராஜபக்ச, ஜே ஆர் ஜயவர்தனவிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும். தனது பதவிக் காலத்தை முடித்துக் கொண்டு கண்ணியமாக வெளியேறிச் செல்லக் கூடிய வாய்ப்பு (Diginified Exit) ஜே ஆருக்கு கிடைக்கவில்லை. இரத்த ஆறு ஓடும் ஒரு நாட்டை, பார்க்கும் இடங்களிலெல்லாம் பிணக் குவியல்கள் தென்படும் ஒரு நாட்டை 1988 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தனது ‘Legacy’ யாக அவர் விட்டுச் சென்றார். 


இந்த நெருக்கடியான தருணத்தில் ஜனாதிபதி முதலாவதாக செய்ய வேண்டிய காரியம் இந்த நெருக்கடியை திடசங்கற்பத்துடன் எதிர்கொண்டு, கடந்து செல்வதற்கு மக்களை தயார்படுத்தும் பொருட்டு சிங்கள - தமிழ் - முஸ்லிம் மக்கள் அனைவரும் இலங்கைப் பிரஜைகள் என்ற முறையில் ஓரணியில் திரள வேண்டும் என்ற வேண்டுகோளை விடுப்பதாகும். ஆனால், அவருக்கு உரைகளை எழுதிக் கொடுக்கும் ஆலோசகர்கள் தேசிய ஒற்றுமை, இன ஐக்கியம், இலங்கை ஒரு பல்லின, பல் கலாசார நாடு போன்ற சொற்களை இதுவரையில் வேண்டுமென்றே தவிர்த்து வந்துள்ளார்கள். 


இரண்டாவதாக, அரசாங்கத்தின் ஒரு சில தரப்புக்கள் மற்றும் அரச ஆதரவு செய்தி ஊடகங்கள் என்பன கடந்த இரண்டரை ஆண்டுகளில் முன்வைத்து வந்திருக்கும் பகுத்தறிவுக்கும், யதார்த்தத்திற்கும் கொஞ்சமும் பொருந்தாத பரப்புரைச் செயற்பாடுகளை உடனடியாக நிறுத்த வேண்டும். இதுவரை காலமும் மிக மோசமான இனவாத / மதவாத பிரச்சாரங்களை கட்டற்ற விதத்தில் முன்னெடுத்து வந்திருக்கும் புத்த பிக்குகளையும் உள்ளடக்கிய அனைத்துப் தரப்புக்களுக்கும் ஒரு கடும் எச்சரிக்கை விடுக்கப்பட வேண்டும். அவர்கள் யாராக இருந்து வந்தாலும் சரி ‘சட்டம் அவர்கள் மீது பாயும்’ என்ற செய்தி தெளிவாக அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். இந்த ஆட்களை எவ்வாறு கையாள வேண்டுமோ அவ்வாறு கையாள்வதற்கு உசிதமான ஒரு சூழல் நாட்டில் இப்பொழுது தோன்றியுள்ளது என்ற விடயம் இதற்கான ஒரு கூடுதல் அனுகூலம்.


சுதந்திரத்திற்கு பின்னர் முதல் தடவையாக சிங்கள இனவாதிகளின் கொடி மட்டுமல்லாமல் தமிழ் இனவாதிகளின் கொடியும், முஸ்லிம் இனவாதிகளின் கொடியும் ஒரே நேரத்தில் மிக மிக தாழ்ந்து பறக்கும் ஒரு யுக சந்தியில் நாங்கள் நின்றிருக்கிறோம். அந்தக் கொடிகள் அவ்வண்ணம் மிக மிக தாழ்ந்து பறக்க வேண்டுமென்பதே எம் அனைவரினதும் பிரார்த்தனை. ராஜபக்சகளின்; கைகளிலிருந்து நழுவிச் செல்லும் சிங்கள இனவாதத்தின் கொடியை ஏந்திப் பிடிப்பதற்கு விமல் வீரவன்ச தரப்பையும் உள்ளிட்ட எவருக்கும் சிங்கள மக்கள் இனிமேலும் ஒரு வாய்ப்பை வழங்க மாட்டார்கள் என்றே தெரிகிறது. 


ஒட்டுமொத்த இலங்கை மக்களும் இனவாதத்தையும், மதவாதத்தையும் நிராகரித்து, ஒரே குரலில் பேசும் ஒரு சமூகத்தை கட்டியெழுப்புவதன் மூலம் மட்டுமே இலங்கை இந்த நெருக்கடியிலிருந்து மீண்டு வர முடியும். அதற்கு உசிதமான ஒரு சூழலை நாட்டில் உருவாக்குவது இன்றைய நிலையில் ஜனாதிபதி மேற்கொள்ள வேண்டிய முதல் முன்னுரிமையாக உள்ளது. அந்த நிலையிலேயே ஓர் ஐக்கிய இலங்கையை கட்டியெழுப்பி, எமது பிள்ளைகளும் பேரப் பிள்ளைகளும் நிம்மதியாக, சந்தோசமாக வாழக்கூடிய ஒரு நாட்டை எம்மால் அவர்களுக்கு விட்டுச் செல்ல முடியும்.


அந்த மாற்றத்திற்கான பயணத்தை சிங்களவர்களும், தமிழர்களும், முஸ்லிம்களும் கூட்டாக இணைந்து முன்னெடுப்பதற்கான வரலாற்றுத் தருணம் இப்பொழுது வந்திருக்கிறது என்பதன் குறியீடே இன்றைய மக்கள் எழுச்சி.