20 அக்டோபர் 2020

சோகம்

 



எம்மில் ஏராளமானோர் ஏதோவோர் சோகத்தில் தான் வாழ்வை கடத்திக் கொண்டு இருக்கின்றோம். உண்மையில் அதற்கான காரணம் என்ன என்று எம்மிடமே கேட்டுக் கொண்டால் எதுவுமே இல்லை என்று இலகுவாகச் சொல்லிவிடலாம்.


வாழ்வை நாம் பார்க்கும் கண்ணோட்டத்தில், எந்தவொரு விடயத்தையும் நாம் பார்க்கும் விதத்தில் தான் சோகமோ சந்தோசமோ இருக்கின்றதே தவிர எதுவுமே எம்மைத் தாக்கும் காரணியாக இருந்து விடாது. “கயிறை பாம்பாகப் பார்த்தால் பாம்பாகவும், வெறும் கயிறாகப் பார்த்தால் கயிறாகவும் தெரியும்” என்று ஒரு கதை சொல்வார்களே அப்படித்தான்.


கண்முன்னே தெரியும் ஒரு விடயத்தை அப்படியே பார்க்காமல் “இது இப்படி இருக்குமோ, இல்லை அப்படி இருக்குமோ” என்று பல்வேறு காரணிகளை நாமே கேட்டுக் கொண்டு உண்மைகளை பார்க்க மறுத்து பிடிவாதமாகப் பிடித்துக் கொண்டு இருக்கின்றோம்.


உண்மையில் எதிர்பார்ப்பிலேயே வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம். எந்தவொரு விடயமும் நாம் எதிர்பார்ப்பது போலவே நடந்து விட்டால் அதில் மகிழ்ச்சி இல்லையென்றால் புலம்பல். காரணம் எதனையும் எதிர்பார்ப்புகளோடு பிணைத்து வாழ்ந்து பழகிவிட்டபின்னர் உண்மைகளை எப்படி புரிந்து கொள்வது.


இதற்கு தான் சொல்வார்கள் கண்ணைத் திறந்து பாருங்கள் என்று. மனிதர்களில் இவர் நல்லவர் கெட்டவர் என்று வகைப்படுத்திக் கொள்கின்றோம். நிதர்சனம் யாதெனின் மனிதர்களில் நல்லவர் கெட்டவர் என்று எவருமில்லை. இது செயல்களைப் பொறுத்தே அமைகின்றது. அதிலும் இது நல்லது இது கெட்டது என்று செயல்களையும் எம்மால் புரிந்து கொள்ள முடியாது. செயல் எமக்குச் சாதகமாக அமைந்து விட்டால் அது நல்லது இல்லையென்றால் அது கெட்டது இப்படித்தானே எடுத்துக் கொள்கின்றோம்.


பொய் என்கின்றோம், உண்மை என்கின்றோம் அதனை எப்படி வகைப்படுத்துகின்றோம்? ஒரு பக்கத்தில் பொய்யாக பார்க்கப்படுவது மறுபக்கத்தில் உண்மைக்குள் தொற்றியிருக்கும், இப்படித்தான் எதுவுமே அதனால்தான் அனைத்தையும் அதன் போக்கிலேயே அப்படியே பார்த்து விட்டோமானால் பிரச்சினைகள் ஏதுமில்லை.


வாழ்வில் கடந்தகாலம், அல்லது எதிர்காலம் இந்த இரண்டில்தான் வாழ்ந்து கொண்டு இருக்கின்றோமே தவிர இப்போது என்ன கிடைத்தது என்பதை சிந்திக்கவும் தவறிவிடுகின்றோம். உண்மையில் கடந்தகாலம் என்பதும், எதிர்காலம் என்பதும் (Illusion) வெறும் மாயை. அடடா நேற்று இப்படி இருந்தோமே அந்த சந்தோசம் இன்று இல்லையே என்று வாழ்வை புலம்புகின்றவர்களே அதிகம் தவிர, அந்த புலம்பல்களால், வேதனைகளால் எதுவும் கிடைக்கப்போவதில்லை என்பதை பார்க்கத் தவறிவிடுகின்றோம்.


அதேபோல எதிர்காலம், இது இப்படி நடந்துவிடுமோ என்ற எதிர்பார்ப்பு, அச்சத்தில் உளன்றுகொண்டு இல்லாத ஒன்றை கற்பனைக்குள் கொண்டு வந்து சேர்த்துக் கொண்டு இருக்கும் அனைத்தையும் ஒதுக்கிவிட்டு பயத்தில் வாழ்வை நகர்த்திக்கொண்டு இருக்கின்றோம்.


ஒரு விருந்து ஒன்றுக்காக ஆயிரங்களை செலவழித்து சென்ற ஒருவர், புகழ்பெற்ற ஒரு உணவகத்தில் “மெழுகுவர்த்தியுடன் இரவுணவை” ஆரம்பிக்கின்றார். (candle light dinner). அப்போது அவருக்கு மகிழ்ச்சி கிடைக்கின்றது. ஆனால் இதனையே மின்சாரம் அற்ற இரவுப்பொழுது ஒன்றில், தன்னுடைய வீட்டிலேயே செய்துவிட மறுப்பார். அவ்வாறான மின்சாரமற்ற பொழுதில் இருளை திட்டிக் கொண்டு, இல்லாதவற்றைப் புலம்பிக்கொண்டு இருப்பாரே தவிர அதன் பொழுதை ரசித்துவிட மாட்டார். இப்படித்தான் இதில் இதில் மட்டும் தான் வாழ்வு மகிழ்ச்சியாக இருக்கும் என்று நமக்கு நாமே ஒரு எதிர்பார்ப்பை உண்டாக்கிக் கொண்டு இருப்பதை தொலைத்துக் கொண்டு இருக்கின்றோம்.


எம்மில் எத்தனை பேர் வாழ்வில் சோகங்களையும், கிடைக்காத எதிர்பார்ப்புகளையும் மட்டுமே நினைத்து வாழ்வைத் தொலைத்துக் கொண்டு இருக்கின்றோம் எனப்பார்த்தால் ஏராளமானவர்கள் அப்படித்தான். என்றாலும் எதுவெல்லாம் கிடைத்துள்ளது அதனால் எத்தனை மகிழ்ச்சி கிடைத்தது என்பதை ஏற்கும் மனப்பக்குவத்தை அடைந்து விடுவதேயில்லை காரணம் நாம் பார்க்கும் விதம் அப்படி இருக்கின்றது.


எதிர்காலத்தில் இப்படி இருக்கவேண்டும் எனச் சிந்திப்பது தவறான விடயமல்ல. ஆனால் இப்படித்தான் இருக்கும் என்று கடந்தகாலத்தோடு அதனை ஒப்பிட்டு அச்சப்படுவதில் வாழ்வு தொலைந்து போகுமே தவிற வேறு எதுவும் நடக்கப்போவதில்லை. இதனால்தான் இந்த நொடி ஆனந்தமே என்று வாழப்பழகிக்கொண்டால் அதில் மகிழ்ச்சி மட்டுமே இருக்கும்.


எமக்கு தேவையான மகிழ்ச்சியும், வாழ்வும் எம்மிடம் மட்டுமே உள்ளது ஆனால் அதனை எற்று எங்கோ தேடி எதை எதையோ கற்பனைக்குள் புகுத்தி வாழ்வை புரிந்துகொள்ளாமல் வாழ்ந்து நம்மையும் தொலைத்து நமக்கு நாமே ஏமாற்றிக் கொண்டு இருக்கின்றோம் என்பதே உண்மை.


நீண்ட நாள் போதைக்கு அடிமையான ஒருவன் அதில் இருந்து மீண்டு வருகின்றான். காரணம் அவன் மனத்திடம். இதனை நாம் அறிவுரையாக ஏராளமானோருக்கு கூறுகின்றோம். அதே போலத்தான் வாழ்வு நமக்காக கொடுத்த சந்தோசத்தை ஒதுக்கிவிட்டு இல்லாதவற்றை மனத்திற்கு கொடுத்து வாழ்வை வீணடித்துக் கொண்டு இருக்கின்றோம் என்ற உண்மையை ஏற்றுக் கொள்ள மறுக்கின்றோம்.


இந்த காரணிகளில் முக்கியமானது காதல் என்றும் கூறலாம். ஒரு நேசம், காதல் அனைத்து மகிழ்வையும் தருகின்றது என்றால், அந்த காதல் தன்னையும் தன் சுற்றையும் உள்ள அனைத்திற்கும் மகிழ்வை, வாழ்வை தருகின்றது என்றால் அதுவே காதல் அதுவே நேசிப்பு. ஆனால் அதனை ஏற்றுக்கொள்ளாமல் மாயையிடம் சிக்கிக் கொள்கின்றோம்.


தேவையற்ற எதனையும் காலமோ வாழ்க்கையோ நம்மிடம் கொண்டு வந்து சேர்ப்பது இல்லை. பிடித்தலுக்கான எண்ணற்ற காரணங்கள் இருந்த போதும் வெறுத்தலுக்கான ஏதோ ஒரு சில காரணம் மட்டுமே மனதை ஆட்கொள்ளும். அது யாதார்த்தம்.


இங்கு எவருமே நூறு வீதம் மிகச் சரியானவர்கள் இல்லை. அடுத்த நிமிடமே வாழ்வை புதுப்பித்துக் கொள்ள முடியும் உத்தமம் அதுவே. சில சமயம் வாழ்வில் ஏராளமான முடிவுகளை எடுத்து இருக்கலாம் அது எமக்கும் எம்மைச் சுற்றி உள்ளவர்களுக்கும் வலிகளைக் கொடுத்திருக்கலாம். ஏன் எமக்கும் கூட. அது கடப்பு என்றும் கூற முடியும். இதுவரை நடந்தது போக இப்போதே வாழ்வை புதுப்பித்துக் கொண்டு வாழ்ந்துவிட முடியும்.


எப்போதுமே வாழ்வு தேங்கி விடுவதில்லை. நாம் செய்தது சரியா? பிழைகளைச் செய்து விட்டோமே என்று ஏராளமான கற்பனைகளை நமக்கு நாமே போட்டுக்கொண்டு எண்ணங்கள் சொல்வதைக் கேட்டு ஒரு குற்ற உணர்ச்சிக்கு உள்ளாகிக் கொண்டு அதனை உண்மையென நம்பிக் கொண்டு வாழ்வில் இருந்து மீண்டுக் கொள்ளாமல் அதனையே தொற்றிக் கொண்டு வாழ்வையும் நமக்கான தருணங்களையும் வீணடித்துக் கொண்டு இருக்கின்றோம்.


இப்போதே மீண்டு விடலாம். சரிகளையும் தவறுகளையும் கோர்த்து இது இப்படி அது அப்படி என குழப்பத்திற்கு உள்ளாகி வாழ்வை தொலைக்கப் பார்க்கின்றோம். உண்மையில் இக்கணமே வாழ்வை வாழப்போகின்றேன் எனக்கானதையும் என் சார்ந்த அனைத்திற்கும் எது மகிழ்வோ அதனைச் செய்யப்போகின்றேன். இதுவரை என்பதையும் அந்த எண்ணங்களையும் தூரவிரட்டி புதிதுக்கு வாய்ப்பளித்து வாழ்வை வாழப்போகின்றேன் என வாழும்போது வாழ்வு பிறக்கின்றது.


உண்மையில் அதற்கான எமக்கான இடத்தை நாம் கொடுக்காமல் பிடிவாதமாக பொய்யாக வலிகளை சேர்த்துக் கொண்டு வசந்தத்தை எதிர்த்து போராடிக் கொண்டு இருக்கின்றோம். இதில் முக்கியம் சரியானதையும் நமக்கானதையும் தேர்வு செய்துக் கொள்வது மாத்திரமே. அதனை விடுத்து எது எதனையோ கற்பனை செய்து இருக்கும் அனைத்தையும் இழந்து வாழ்வையும் உள்ள அனைத்து சந்தோசங்களையும் தொலைத்துக் கொள்வதும் ஒருவித கோழைத்தனமே.


எப்படி என்றாலும் இருக்கும் அனைத்தையும் அப்படியே கண்திறந்து பார்ப்போமானால் வாழ்வில் எப்போதுமே துன்பங்கள் ஏற்படுவதில்லை. கால்கள் இல்லாத ஒருவரை பார்க்கும் போது எமக்கு இருக்கின்றதே என்ற திருப்தி ஏற்படுமே, அப்படித்தான் இங்கு அனைத்துமே நம்மிடமே உள்ளது அதனை எடுத்துக் கொள்ளாமல் மாய உலகில் வாழ்ந்து கொண்டிருப்பதைத்தான் பலர் செய்கின்றார்கள்

ஏன் நாமும்தான்



அவமானம்

 


*சாதிக்க விருப்பமா?* *அவமானப்படுங்கள்!*


*என்னை*

*நானே, யார் என்று புரிய எனக்குத் தேவைப்படும்*

*ஓர் ஆயுதம் தான் அவமானம்.*


**இது உண்மை என்பது போல்,*


*அனைவரின் வாழ்விலும்*

*ஏதாவது ஒரு சம்பவம் நடந்திருக்கும்.*


*நம் மீது குப்பையையும் சாணத்தையும் கொட்டுகின்றனரே  என்று,*

*செடி ஒரு நாளும் நம்மைப் போல் ஆதங்கப்படுவதில்லை.*


*அழுது ஆர்ப்பாட்டம் செய்வதில்லை.*


*அந்தக் குப்பையை தனக்கான உயிர் சத்தாக எடுத்துக் கொண்டு,*


*பூக்களை, காய், கனிகளைத் தருவது இல்லையா!*


*நாம் அச்செடிப் போல இருக்க வேண்டாமா?*


*மற்றவர்களின் ஏளனங்களையும் அவமானங்களையும் உரமாக ஏற்று,