31 ஜூலை 2022

சிந்திப்பதற்கு மட்டும்

  


*கணவன் மனைவியைவிட உயர்வாக இருக்க வேண்டியவை மூன்று.*

1. வயது,

2. அறிவு,

3. பணம்.

*மனைவி கணவனை விட உயர்வாக இருக்க வேண்டியவை ஐந்து.*

1. பொறுமை,

2. சுத்தம்,

3. அன்பு,

4. திட்டமிடுதல்,

5. பிரார்த்தனை. 

*இருவரும் சமமாக இருக்க வேண்டியவை மூன்று.*

1. புரிதல்,

2. சகித்தல்,

3. மதித்தல்.


யாரெல்லாம் நம்மோடு இருப்பார்கள், விலகுவார்கள் என்று காலம் முடிவு செய்வதில்லை.

*அவரவர்களின் வார்த்தையும், நடத்தையும் தான் முடிவு செய்கிறது.*


வாய் தவறி விழும் பேச்சுக்கள். கை தவறி விழும் கண்ணாடியை விட கூர்மையானது.

*யாரிடம் பேசுகிறோம் என்பதை விட என்ன பேசுகிறோம் என்பதை அறிந்து கொண்டு பேசுங்கள்.*


நிம்மதியுடன் வாழ்கிறேன் என யாராலும் எளிதில் சொல்லப்படுவதில்லை.

*வாழ்க்கை அவ்வளவு எளிதில் நிம்மதியை யாருக்கும் தந்து விடுவதில்லை.*


மற்றவர் தவறைக் கவனித்துக்கொண்டே இருப்பவர்கள்.

*தன் தவறுகளை வளர்த்துக் கொண்டே இருக்கிறார்கள்.*


பணம் இருந்தால் நீ  உயர்ந்தவன்  

குணம் இருந்தால் நீ *குப்பை.*

நடித்தால் நீ *நல்லவன்.*

உண்மை பேசினால் *பைத்தியக்காரன்.*

அன்பு காட்டினால் *ஏமாளி.*

எடுத்துச் சொன்னால் *கோமாளி.*


இறைவன் தனக்குப் பிடித்தவர்களுக்கே அதிகப் பொறுப்புகளை கொடுத்து.

அதன் பொருட்டு சோதனைகளை ஏற்படுத்தி.

பக்குவத்தையும், நிதானத்தையும் பரிசளிக்க விரும்புகிறான் 


நிலவை....தூரத்தில் இருந்து ரசிப்பதை போல. 


சில உறவுகளையும்..... தூரத்திலிருந்து ரசிக்க கற்றுக்கொள்ள வேண்டும்.

*சில வலிகள் இல்லாமல் இருக்க.*


தன்னுடைய செயலும் தன்னுடைய வார்த்தைகளும் மட்டும்தான் சரியன்று வாதாடுபவர்கள் மத்தியில் .

அமைதி மட்டும் உன் ஆயுதமாக வைத்துக்கொள்.

*அவர்களுக்கு புரியவைக்க.*

*வரும் காலம் ஒன்று உள்ளது.*

*சிந்தித்து செயல்படு இதுவும் கடந்து போகும்.*


நிலையென்று ஒன்றுமில்லை இவ்வுலகில்.

*ஒவ்வொரு சோகமும், துன்பமும் வாழ்க்கையில் நல்ல பாடத்தை கற்று தரவே வருகின்றது.*


 யாரும் உன் கண்ணீரை பார்ப்பதில்லை.

யாரும் உன் கவலைகளை பார்ப்பதில்லை.

யாரும் உன் வலிகளை பார்ப்பதில்லை.

*ஆனால் எல்லோரும் உன் தவறை மட்டும் பார்ப்பார்கள்.*


மனிதனும் வாழை மரமும் ஒன்று தான்.

தேவைப்படும் வரை வைத்திருப்பார்கள்.

*தேவை முடிந்தவுடன் வெட்டி வீசி விடுவார்கள்.*


இந்த பதிவு எல்லோருக்கும் பொருந்தும் என்பதால் பதிவிட தோன்றியது.

15 ஜூலை 2022

சஜித்தின் அரசியல் எதிர்காலம் ரணிலின் கைகளில்- அடுத்து என்ன செய்ய வேண்டும் ?



இலங்கையின் அரசியல் இப்போது மிகப்பெரிய பேசுபொருளாக மாறியிருக்கிறது, 24 மணிநேரமும் ஆச்சரியங்களுக்கும், அதிர்ச்சிகளுக்கும் பஞ்சமில்லாமல் நாட்கள் நகர்ந்து கொண்டிருக்கின்றன.


நவீன துட்டகைமுனு என போற்றித்துதிக்கப்பட்ட கோட்டபாய ராஜபக்சவின் வீழ்ச்சியும், ஒற்றை ஆசனமும் இல்லாமல் தோற்கடிக்கப்பட்ட ரணிலின் திடீர் எழுச்சியும் இருவேறு பயணப்பாதைகளையும் ,பட்டவர்த்தனமான உண்மைகளையும் உரக்க கற்றுத் தந்திருக்கின்றன.


இதனாலும், இதன் பின்னரும் நாட்டில் பலவித அரசியல் மாற்றங்களுக்கான புதிய புதிய பாதைகள் திறக்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் உருவாகியுள்ளதோடு, சிலரது அரசியல் எதிர்காலம் என்பது சூனியமாக்கப்படவுள்ளது என்பது திண்ணம்.


கோட்டா சாம்ராஜ்ஜியத்தின் சரிவு என்பது அவர்களாலேயே தேடிக்கொள்ளப்பட்டது என்றாலும், இதற்க்கு இடைநடுவே சிக்கப்போகும் சஜித்தின் எதிர்காலம் என்பது திடீர் திருப்பத்துக்குரியது.




அடுத்து சஜித் எப்படி தன் காய்களை நகர்த்த வேண்டும் என்பதே இந்த பதிவின் முக்கிய நோக்கமாகும்.


வாழ்க்கை பலருக்கும் ஏராளமான சந்தர்ப்பங்களை உருவாக்கி கொடுப்பதில்லை, கிடைக்கும் சந்தர்ப்பங்களை சரியாக திட்டமிட்டு பயன்படுத்திக் கொள்பவர்களே உலகில் வெற்றியாளர்களாக கொண்டாடப்படுகிறார்கள்.


இங்கேதான் ரணில் வெற்றியாளராகவும், சஜித் வெற்றியை கோட்டைவிட்டவராகவும்  எங்களால் நோக்கப்படுகின்றார், அதற்கு காரணம் சஜித் சந்தர்ப்பத்தை சரியாகவும், சாதுரியமாகவும் பயன்படுத்த தவறியமையே.


இன்று ரணிலுக்கு வாய்த்திருக்கும் அத்தனை வாய்ப்புக்களையும் கைப்பற்றி, பதில் ஜனாதிபதி இருக்கையிலும் கூட இருந்திருக்க வேண்டியவர் சஜித் பிரேமதாசவே.


கோட்டா அன்று சர்வகட்சி ஆட்சிக்கு முதலில் அழைத்தது SJB யைத்தான், ஆனால் விடாப்பிடியாக கோட்டா பதவி விலகினால்தான் ஆட்சிப் பொறுப்பை ஏற்பேன் என்று சிறுபிள்ளைத்தனமான கோரிக்கையை முன்வைத்து வாய்ப்பை தட்டிக்கழிக்கிறார்.


சாணக்கிய அரசியல்வாதியான ரணில், Gottagogama போராட்டக்காரர்கள் மீது நீங்கள் கைவைக்க கூடாது எனும் உறுதிமொழியை வைத்துக்கொண்டு ஆட்சிப்பீடமேறுகிறார் , போராட்டக்காரர்கள் மீது கைவைக்காமல் விட்டால், கோட்டா எப்படியும் வீட்டுக்கு போகவேண்டிவரும் என்றும், இயல்பிலேயே நிறைவேற்றதிகார கதிரையை எட்டிவிடலாம் என்பதும் ரணிலின் தந்திரம்.


ஆனால் சஜித் அங்கே தந்திரத்துடன் தருணத்தை சரியாக பயன்படுத்திக் கொள்ள தவறியதே, ரணிலின் இத்தனை எழுச்சிக்கும் காரணம் என்பேன்.


"எனக்கு கண் தெரியாது உதவுங்கள்" என்று ஒருவரும் ,


"எனக்கு பார்க்க முடியாமல் போனவற்றையெல்லாம் உங்களுக்கு பார்க்கும் பாக்கியத்தை கடவுள் தந்திருக்கிறார் - நீங்கள் அதிஷ்டாசாலிகள் " என்று இன்னுமொருவரும் யாசகம் கேட்கையில் இரண்டாமவர் இலக்கை இலகுவாய் எட்டிவிடுவார்.


இங்கே முதலாமவராக சஜித்தும் ,இரணடாமவராக ரணிலும் காணப்படுகின்றார்கள், ஒரு விடயத்தை எப்படி Apply செய்கிறோம் என்பதிலேதானே ஒவ்வொருவர் வெற்றியும் தங்கியிருக்கிறது. ரணில் அதனை Apply செய்த விதம் அவரை நிறைவேற்றதிகார இருக்கையை நெருங்கும் இலக்கை இலகுபடுத்தியிருக்கிறது.


இதுவரை நடந்த தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு, சஜித் இனிமேலாவது சாதுர்ய அரசியலை கையில் எடுக்க வேண்டும், இனியும் சாதுர்யத்தை கையிலெடுக்காமல் போனால் வரலாற்றுத் தவறை இழைத்தவராகிவிடுவார்.


இப்போதிருக்கும் நிலையில் சர்வதேசத்தின் செல்லப் பிள்ளையாகவும், இப்போதிருக்கும் அரசியல், பொருளாதார நெருக்கடி நிலைமையை ஓரளவுக்கேனும்  தீர்க்கவல்ல தலைவராக ரணிலையே எல்லோரும் நோக்குகிறார்கள். நானும் அப்படித்தான் .


இந்த நேரத்தில் ரணில் ஜனாதிபதியானது சட்டவிரோதமானது என்று சிறு பிள்ளைத்தனமான அறிக்கைகள் விடுவதை விடுத்து வேலையில் இறங்கவேண்டும்.


இலங்கை அரசியல் சாசனத்தின் படி, ஜனாதிபதி பதவி வகிக்கும் ஒருவர் அந்த பதவியில் இருக்கும் தருணத்தில் மரணித்தாலோ, பதவி நீக்கப்பட்டாலோ, ஊழல் குற்றச்சாட்டுக்களுக்கு ஆளானாலோ அந்த பதவி வறிதாகும் தருணத்தில் அந்த பதவிக்கு நேரடித் தகுதியுடையவராக பிரதமர் பதவி வகிப்பவரே அந்த பதவியில் நியமிக்கப்படுவார்.


அதன்பின்னர் ஒரு மாதத்துக்குள் நாடாளுமன்றம் கூடி ஜனாதிபதி பதவிக்கான போட்டி பல்முனைகளில் நிலவுமாக இருந்தால், வாக்கெடுப்புக்கு விடப்பட்டு அதிக வாக்குகள் பெறுபவர் ஜனாதிபதியாக தேர்வாவர்.


இது சட்ட நடைமுறையாக பேசப்படுகின்றது.


இப்போது அரசியல் யாப்பின் பிரகாரம் பிரதமர் பதவி வகிப்பவரான ரணில் விக்கிரமசிங்க, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவியை  நெருங்கிவிட்டார்.


இதனை இப்போதைய நிலையில் யாராலும் தடுக்க முடியாது என்பதே எல்லோரதும் பொதுவான அபிப்பிராயமாகும். இந்தியாவும், அமெரிக்காவும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்காது என்பதை நம்பியே ஆகவேண்டும் .


வெள்ளிக்கிழமை (15) மாலை வேளை வரையில் ஜனாதிபதி பதவிக்கு ரணில் விக்கிரமசிங்க, டலஸ் அழகப்பெரும, சஜித் பிரேமதாச ஆகியோர் போட்டியிடவுள்ளதாக செய்திகள் உறுதிப்படுத்துகின்றன.


ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன -145 ஆசனங்கள்

சஜித்தின் SJB - 54 

TNA -10 

JVP - 3 


இப்படியிருக்கும் போது சஜித் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட்டு வெற்றிபெறும் வாய்ப்புக்கள் குறைவாகவே இருக்கின்றன , SLPP யுடன் கூட்டாக இணைந்து போட்டியிட்ட ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் ஒரு குழு சஜித்துக்கு ஆதரவை வழங்கினாலும்கூட, சஜித் வெற்றிபெறுவாரா என்பது கேள்விக்குரியதே.


ஆகவே தேவையற்ற போட்டி நிலையையும், சிக்கல் நிலையையும் தவிர்த்து, பிரதமர் பதவியையாவது எப்படி கைப்பற்றுவது எனும் வேலைத்திட்டத்தில் சஜித் காய்களை நகர்த்த வேண்டும்.


ஏனென்றால் சர்வகட்சி அரசமைக்க கோட்டா அழைத்த போது, அதனை பெரும் எடுப்பில் மறுத்த சஜித், மறுநாள் ரணில் பிரதமராகப்போகிறார் என்ற செய்திகள் வெளிவந்தவுடன் அவசர அவசரமாக கோட்டாவுக்கு கடிதம் அனுப்பி ஆட்சிப்பொறுப்பை ஏற்க தயார் என்று கடிதம் எழுதியதெல்லாம் சிறுபிள்ளைத்தனம்.


கோட்டா பதவி விலகினால்தான் பதவி ஏற்பேன் என்று கெத்துக் காட்டிய சஜித், அதற்கு அடுத்த நாளே ரணிலை கண்டவுடன் ஆட்சி அமைக்க தயாராகி இருக்கிறோம் என்பதெல்லாம் எனக்கு சஜித் மீது இருந்த நம்பிக்கையை இல்லாது செய்திட்ட சம்பவங்கள்.   


ஆகவே பதவி ஆசையில் ஆடுகிறார் என்று ரணிலை நாம் குற்றசாட்டிக் கொண்டிருக்காமல், அவரை அவர் பாட்டிலேயே விட்டுவிட்டு பிரதமர்  ஆசனத்தை கைப்பற்றி நாட்டை ஆள முற்படவேண்டும். 


ஒருவேளை ரணில் தன் திறமையை பயன்படுத்தி IMF பேச்சுவார்த்தைகளை வெற்றிக்கு கொண்டு சென்று, நாட்டை சுமூகமான நிலைக்கு இட்டுச் செல்வாராக இருந்தால், அதன் பெருமையும் பங்கும் சஜித்துக்கும் தானாகவே வந்து சேர்ந்துவிடும்.


மாறாக நாட்டை குழப்பும் வேலைகளில் அவர் ஈடுபடுவாராக இருந்தால், இலங்கையில் அரசியல் ஸ்திரத்தன்மை இல்லாமல் இருப்பதனால் IMF விலத்திக் கொள்கிறது என்ற அறிக்கைகள் வருகின்றபோது, அதற்கு காரணகர்த்தாவாக அங்கே சஜித் குற்றவாளியாக நோக்கப்படவும் வாய்ப்பிருக்கிறது.


இதனிடையே மஹிந்தவுக்கு சுகயீனம் வந்துவிட்டது என்ற செய்திகள் முன்னர் வெளியாகிய தருணத்திலிருந்து, பிரதமர் பதவிக்கு வருவார் என்ற பேசப்படும் டலஸ் அழகப்பெருமவுக்கு இப்போது பிரதமர்  கதிரை ஆசை வந்திருக்கிறது. அதனால்தான் மொட்டுக் கட்சியின் தீர்மானம் கடந்து, ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடப்போகிறேன் என்று அறிக்கை விட்டுக் கொண்டிருக்கிறார், இதன்முலம் அவர் பிரதமர் பதவியை கோருகிறார் என்பதும் தெளிவாகின்றது.


ஆனால் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உயர் பீடம் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்கவே முடிவெடுத்திருப்பதால் டலஸ் தோற்றுப்போவதும் உறுதியாகியுள்ளது.


ஆகவே இவை எல்லாவற்றையும் நோக்கும் போது ரணில் ஜனாதிபதியாகவும், எதிர்க் கட்சியில் இருந்து ஒருவர் பிரதமராகவும் இருப்பதே அரசியல் நெருக்கடிகளை தீர்க்கவல்ல பொறிமுறையாகும். சாத்தியப்படுமா என்பது பெருத்த கேள்வியாயினும் சாத்தியமாகாவிட்டால் சாக்கடைநோக்கி நாம் தள்ளப்படுவதை யாராலும் தடுக்கமுடியாது.


ஆகவே தருணத்தை சரியாக பயன்படுத்திக் கொண்டு ஜனாதிபதி பதவிக்கு ரணிலுக்கு ஆதரவு வழங்குகிறோம் என்று தெரிவித்து, பிரதமர் பதவியை கோரி சஜித் அதை நோக்கி காயை நகர்த்துவாராக இருந்தால் சஜித் வாழ்க்கை பிரகாசமாகும்.


ஹர்ஷ டீ சில்வா, எரான் விக்ரமரத்ன போன்ற பொருளாதார வல்லுநர்களை தன் பக்கத்திலேயே வைத்திருக்கும் சஜித், பிரதம அமைச்சராகி, சில வேலைத்திட்டங்களை முன்னெடுத்து ரணிலுடன் சேர்ந்து பயணிப்பதே காலத்தின் தேவையாக உள்ளது. 


இதுவே நாட்டில் எழுந்திருக்கும் மக்கள் எழுச்சியை தவிர்க்கவும் துணை புரியும், மாறாக ரணில் ஜனாதிபதியாகவும் , மொட்டு கட்சி உறுப்பினர் ஒருவரே பிரதமராகவும் தேர்வு செய்யப்பட்டால் நாட்டில் அமைதியை பேணமுடியாது போகும் என்பது நிதர்சனமான உண்மை .


இனவாத அரசியலை வெறுத்து ஒதுக்கும் பேரினவாத மக்களது சிந்தனை மாற்றத்தை காரணியாக கொண்டு, வகைதொகையின்றி  தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை, தமிழர் நிலங்கள் விடுவிப்பு, மலையக தோட்ட தொழிலாளர் பிரச்சனைக்கு தீர்வு என்று தடாலடி நடவடிக்கைகளில் சஜித் இறங்குவாராக இருந்தால் அவரது எதிர்காலம் வேறு ஒருகோணத்தில்  பயணப்படும்.


இல்லையென்றால் இப்படியே இவர் முட்டுக்கட்டை அரசியல் புரியும் தருணத்தில், ரணில் தன் நரி மூளையை பயன்படுத்தி SJB யை சிதைத்து அங்கிருந்து சஜித்துக்கு போட்டியாக பொன்சேகாவையும், சம்பிக்க ரணவக்கவையும் மாற்று தலைவர்களாக்கி விடும் முயற்சிகளில் இறங்குவாராக இருந்தால், சஜித் நிலைமை என்னவாகும் என்பதை சிந்தித்து பாருங்கள்.


ஆகவே, மைக்கை கொடுத்தால் வாய்க்குள் விழுங்கி கொள்ளும் அவரது அருகில் இருக்கும் வெத்துவேட்டுக்களின் முட்டாள்தன சிந்தனைகள் கடந்து, கொஞ்சம் புத்திசாலிதனமாக சஜித் காய்களை நகர்த்தும் போது எதிர்காலத்துக்கான தலைவராக தோற்றம் பெறுவார்.


ரணில் விக்கிரமசிங்க - வயது 73 

சஜித் பிரேமதாச- வயது- 55  


ஏன் இங்கே வயதைக் குறிப்பிடுகிறேன் என்பதை வெளிப்படையாக உங்களுக்கு புரிய வைக்க வேண்டிய தேவையில்லை.


ராஜபக்ச சாம்ராஜ்யமும்  இல்லாது ஒழிக்கப்பட்டிருக்கும் நிலையில், அடுத்த 10 ஆண்டுகளில் சஜித் ஒரு பெரும்தலைவனாய் மிளிரும் வாய்ப்புக்கள் உருவாக்கலாம் +உருவாகலாம் . சஜித் போட்டியாக வேறு தலைவர்ரகள் உருவாவதை தடுத்து , தவிர்த்து இலகுவாய் இலக்கை எட்டலாம்.


வாய்ப்பு அடிக்கடி வாசல் கதவுகளை தட்டுவதில்லை- சஜித்  விழித்தெழுவாரா என்று காத்திருப்போம்.